June 3, 2026
தண்டோரா குழு
கிராமப்புற மக்களின் வாழ்வாதார மேம்பாடு, நிலையான விவசாயம் மற்றும் இயற்கை நார் அடிப்படையிலான தொழில்துறையை ஊக்குவிக்கும் நோக்கில், அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் வளாகம் 2ல்,“நிலைத்த சிசல் அமைப்புகளுக்கான மையம்” (Centre for Sustainable Sisal Systems – C3S) புதன்கிழமை தொடங்கப்பட்டது.
நிறுவன வளாகம்–II-ல் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நிறுவனத்தின் வேந்தரும் நிர்வாக அறங்காவலருமான டி.எஸ்.கே. மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார். துணைவேந்தர் முனைவர் வை. பாரதி ஹரிசங்கர் வாழ்த்துரை வழங்கினார்.
இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் (CSIR) தலைமை இயக்குநரும்,அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி துறையின் (DSIR) செயலருமான என்.கலைச்செல்வி,புதிய மையத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
அவர் தனது சிறப்புரையில்,இயற்கை நார் வளங்களை அடிப்படையாகக் கொண்ட நிலையான வளர்ச்சி,புதுமை சார்ந்த கிராமப்புற முன்னேற்றம் மற்றும் சமூகத் தேவைகளுக்குப் பயன்படும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களின் பங்கு குறித்து வலியுறுத்தினார்.
மேலும், CSIR–AMPRI,போபால் நிறுவன இயக்குநர் தல்லாடா பாஸ்கர்,சிசல் சார்ந்த தொழில்கள் இந்தியாவின் உயிரியல் பொருளாதார வளர்ச்சிக்கும் கிராமப்புற வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் முக்கிய பங்காற்றுவதாகக் குறிப்பிட்டார்.
இந்த C3S மையம், CSIR–AMPRI நிறுவனத்துடன் இணைந்து,இந்தியாவின் தேசிய சிசல் இயக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
வளாகம்–II-ல் உள்ள 10 ஏக்கர் பரப்பளவிலான சிசல் பண்ணையை மையமாகக் கொண்டு,சிசல் சாகுபடி, இயந்திரமய நார் பிரித்தெடுத்தல், மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் தொழில்முனைவு வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும், ஆராய்ச்சி மற்றும் சமூகப்பணியை ஒருங்கிணைக்கும் வகையில் செயல்படும் இந்த மையம், நிறுவனத்தின் நாட்டு நலப்பணித்திட்ட (NSS) மாணவர்கள் மற்றும் தத்தெடுக்கப்பட்டுள்ள 26 கிராமங்களில் நடைபெறும் சமூக மேம்பாட்டு திட்டங்கள் மூலம் விவசாயிகள் மற்றும் கிராம மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு பங்களிக்க உள்ளது.
ஆராய்ச்சி,புதுமை,நிலைத்த வளர்ச்சி மற்றும் சமூகப் பொறுப்பு ஆகிய துறைகளில் நிறுவனத்தின் முன்னெடுப்புகளுக்கு இந்த மையம் புதிய மைல்கல்லாக அமையும் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.முன்னதாக பதிவாளர் முனைவர் ஹெ.இந்து வரவேற்புரை வழங்கினார்.
நிகழ்ச்சியின் நிறைவில் C3S ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர். வனிதாமணி நன்றியுரை வழங்கினார். நிலைத்த வேளாண்மை,இயற்கை நார் தொழில்நுட்பம், மதிப்பூட்டப்பட்ட உற்பத்தி மற்றும் கிராமப்புற முன்னேற்றம் ஆகிய துறைகளில் தேசிய அளவிலான முன்னோடி மையமாக C3S உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.