May 1, 2026
தண்டோரா குழு
கோயம்புத்தூர் மேற்கு புறவழிச் சாலையின் முதல் கட்டப் பணிகளின் ஆரம்பமானது, கோவைப்புதூர் பகுதியில் முதலீட்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.
இதன்மூலம் இப்பகுதி மிகவேகமாக வளர்ச்சியடையக்கூடிய பகுதியாக முக்கியத்துவம் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்பகுதியானது மைல்கல் முதல் மாதம்பட்டி சந்திப்பு வரை இணைக்கும் இந்த 11.8 கி.மீ தொலைவிலான சாலை, ஒட்டுமொத்த 32.43 கி.மீ புறவழிச் சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது பயணிகளின் போக்குவரத்து நெரிசலை பெருமளவு குறைக்கும்.
மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் பாலங்களைக் கொண்ட இந்த நான்கு வழிச் சாலை, மைல்கல் – மாதம்பட்டி இடையேயான பயண நேரத்தை சுமார் 45 நிமிடங்களிலிருந்து வெறும் 10-15 நிமிடங்களாகக் குறைக்கிறது. இது உக்கடம், ஆர்.எஸ்.புரம், ரேஸ் கோர்ஸ் மற்றும் டவுன் ஹால் போன்ற கோவை நகரின் முக்கிய இடங்களுக்கான போக்குவரத்து வசதிகளை எளிதாக்குவதால், கோவைப்புதூர் முன்னெப்போதும் இல்லாத எளிதில் சென்றடையக்கூடிய இடமாக மாற்றுகிறது.
தூய்மையான காற்று மற்றும் அமைதியான சூழலுக்குப் பெயர் பெற்ற கோவைப்புதூர், இப்போது மேம்பட்ட சாலை வசதிகளால் ஒரு முக்கிய வளர்ச்சி மண்டலமாக உருவெடுத்து வருகிறது. இந்த புதிய சாலை வசதி, போக்குவரத்தை எளிதாக்கி இருப்பதால், வீடு வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் கோவைப்புதூரின் மீதான ஈர்ப்பை அதிகரித்துள்ளது. மேம்படுத்தப்பட்ட சாலை உள்கட்டமைப்பு என்பது பெரும்பாலும் ரியல் எஸ்டேட் விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணியாக இருந்து வருகிறது; அந்த வகையில் கோவைப்புதூர் இதன் மூலம் பெரும் பயன் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து வசதிகள் மேம்படுவதால், நிலத்தின் விலை சீராக உயர வாய்ப்புள்ளது. இது முதலீட்டாளர்கள், கட்டுமான மேம்பாட்டாளர்கள் மற்றும் நில உரிமையாளர்களை இப்பகுதியில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தி கொள்ள ஊக்குவிக்கும். இப்பகுதியில் பரவலாக விரிந்திருக்கும் நிலமும், புதிய சாலை வழித்தடத்திற்கு மிக அருகாமையில் அமைந்திருப்பதும், நீண்டகால முதலீட்டிற்கு இதை மிகவும் உகந்த இடமாக மாற்றுகிறது. நிலத்தின் மீதான நீண்டகால மதிப்பினை எதிர்பார்க்கும் தனிநபர் முதலீட்டாளர்கள் மற்றும் பெரிய குடியிருப்புத் திட்டங்களைத் திட்டமிடும் கட்டுமான நிறுவனங்கள் ஆகிய இரு தரப்பினரின் கவனத்தையும் கோவைப்புதூர் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறுகிய காலத்தில், இப்பகுதியில் வீட்டு மனைத் திட்டங்கள் வில்லா குடியிருப்புகள் மற்றும் நடுத்தர முதல் உயர்தர வீட்டுத் திட்டங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இங்கிருக்கும் இதமான சூழல், பரபரப்பான வாழ்க்கையில் சற்றே ஓய்வு எடுக்க ஆசைப்படும் ‘இரண்டாவது வீடு’ மற்றும் ஓய்வுக்கால வாழ்விடங்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது. குடியிருப்புகளுக்கான தேவை அதிகரிக்கும்போது, பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் சில்லறை விற்பனை அங்காடிகள் போன்ற சமூக உள்கட்டமைப்புகளும் இங்கு மேலும் வளர்ச்சியடையும்.
மேற்கு வெளிவட்டச் சாலையின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப் பணிகள் நிறைவடைந்த பிறகு, அதன் நீண்டகாலத் தாக்கம் இன்னும் பன்மடங்கு அதிகமாக இருக்கக்கூடும். விரைவில் தொடங்கவுள்ள இந்த இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப் பணிகள், போக்குவரத்துச் சீரமைப்பை மேலும் மேம்படுத்துவதுடன், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரியல் எஸ்டேட் துறைக்கான வாய்ப்புகளையும் கணிசமாக உயர்த்தும். ஒவ்வொரு கட்டமாக நடைபெறும் இந்தப் பணிகள் முழுமையடைந்து செயல்பாட்டுக்கு வந்ததும், கோவைப்புதூர் பகுதியில் வணிக அலுவலகங்கள், குடியிருப்பு மையங்கள், கோ-வொர்க்கிங் சென்டர்கள்), உணவகங்கள்/ஹோட்டல்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளுக்கு அருகில் லாஜிஸ்டிக்ஸ் மையங்கள் மற்றும் கிடங்குகள் மிக வேகமாக உருவாக வாய்ப்புள்ளது.
கோவைப்புதூர் பகுதியில் நிலத்தின் விலை ஏற்கனவே சீரான ஏற்றத்தைக் கண்டு வருகிறது. உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் தொடர்ந்து மேம்பட்டுவருவதால், இப்பகுதியில் நில மதிப்பு இன்னும் வேகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சாலைத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்பகுதியில் நிலத்தின் ஆரம்பக்கட்ட விலை அதிகரித்து வருவதற்க்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்திருக்கின்றன.