March 17, 2026
தண்டோரா குழு
பொருளாதார ரீதியாக பின்தங்கிய இளைஞர்களுக்கு தொழிற்கல்வி வழங்கி வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் எஸ்.கே.பி சுனந்தா ராம்மோகன் திறன் மையம் உடுமலைப்பேட்டையில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மையம் 18 முதல் 27 வயதுக்குள் உள்ள, பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்த, ஆண்டு குடும்ப வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவான இளைஞர்களுக்கு இலவச தொழிற்கல்வி வழங்குகிறது.இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் லாஜிஸ்டிக்ஸ் துறையில் வேலை பெறும் வகையில் EXIM Executive, Supply Chain Associate மற்றும் Warehouse Associate போன்ற பயிற்சிகள் 45 முதல் 90 நாட்கள் வரை வழங்கப்படுகின்றன.இந்த பயிற்சிகளுக்காக மாணவர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
இந்த முயற்சி,கரூரைச் சேர்ந்த அமெரிக்காவில் வசிக்கும் மருத்துவர் டாக்டர் எம்.ராம் மோகனின் மகாலட்சுமி–முத்துராமலிங்கம் அறக்கட்டளையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.பிறந்த மண்ணுக்கு நன்றியறிதலாகவும்,இளைஞர்கள் திறன் வளர்ச்சி மூலம் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்ற நோக்கிலும் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை அமெரிக்காவில் வசிக்கும் டாக்டர் ராஜேந்திர பிரசாத் பரிந்துரையின் பேரிலும்,ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கல்விக் கழகத் தலைவர் டாக்டர்.வி.ஜி.மோகன் பிரசாத் மற்றும் அதன் உறுப்பினர்கள், அறங்காவலர்களின் ஆதரவுடனும் தொடங்கப்பட்டுள்ளது.இந்த மையம் எஸ்.கே.பி பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கல்விக் கழக தலைவர் டாக்டர் மோகன் பிரசாத் கூறுகையில்,
“தொழிற்கல்வி மூலம் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் நிலையான வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். இந்த திறன் மையம் கிராமப்புற இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும்” என்றார். SKPSR திறன் மையம், மற்ற 30 திறன் மையங்களுடன்இணைந்து, எதிர்காலத்தில் இது போன்ற மேலும் பல படிப்புகளைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த முயற்சிக்கு ஆலோசகராக லாஜிஸ்டிக்ஸ் துறையில் அனுபவம் பெற்ற J.V Rao, Retired professor of Anna University ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். மேலும் Rotarian சாயிராம் அவர்களின் மேற்பார்வையில் இந்த இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கல்விக் கழகத்தின் துணை செயலாளர் கோபாலன் இந்த மையத்தின் செயலாளராகவும் பணியாற்றுகிறார்.
பொள்ளாச்சி ஐ.டி.நிபுணர் ராமலிங்கம், வினோத்,பாலா மற்றும் கௌதம் ஆகியோர் பயிற்சி மற்றும் செயல்பாட்டு பணிகளில் முக்கிய பங்காற்றி தன்னலமற்ற சேவை புரிகிறார்கள்.
மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு..!
லாஜிஸ்டிக்ஸ் துறை திறன் கவுன்சில் (Logistics Sector Skill Council) அங்கீகாரம் பெற்ற பயிற்சி வழங்கப்படுவதுடன், மூன்றாம் தரப்பு மதிப்பீடு மற்றும் திறன் இந்தியா சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு நாடு முழுவதும் வேலைவாய்ப்பு பெற உதவியும் வழங்கப்படும். ஆரம்ப சம்பளம் மாதம் சுமார் ரூ.15,000 அளவில் தொடங்கி, அனுபவத்தின் அடிப்படையில் அடுத்த சில ஆண்டுகளில் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.
இந்த திறன் மையம், கல்வி மற்றும் தொழில் துறைகளுக்கு இடையிலான இடைவெளியை குறைத்து, இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு பெற வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் (MSDE) கீழ், உற்பத்தி மற்றும் சேவை இரண்டையும் உள்ளடக்கிய ” ப்ளூ காலர்” வேலைகளில் கவனம் செலுத்தும் பன்முகத்தன்மை கொண்ட தொழில் துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 31 கவுன்சில்கள் உள்ளன, ஏனெனில் இவற்றுள் 80% வேலைவாய்ப்புகள் உள்ளன.
தொழில்துறையுடன் நெருக்கமாக செயல்படும் ஒரே அமைப்பு இதுவாகும், இப்போது தமிழ்நாடு உட்பட ஒவ்வொரு மாநிலமும் திறன் மேம்பாட்டு நிறுவனங்களைத் தொடங்கியுள்ளன, அவை தொழில்கள் / தொழில் அதிபர்களை கல்வி முறைக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதன் மூலமும், மேலும் கல்வி அமைப்பில் தொழில் அதிபர்கள் ஈடுபடுவதற்கான ஒரு தளத்தை உருவாக்குவதன் மூலமும் சிறப்பாகச் செயல்படுகின்றன. இதனால் கல்விப் பயிற்சிக்கும் தொழில் பயிற்சிக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க முயற்சிக்கின்றன.