March 16, 2026
தண்டோரா குழு
இந்தியாவின் முன்னணி ரிய ல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான கோத்ரெஜ் ப்ராப்பர்டீஸ்,கோவையில் சுமார் 44 ஏக்கர் நிலத்தை வாங்கி உள்ளது. இந்த இடத்தில் பிரீமியம் தரத்திலான வீட்டு மனைகளை உருவாக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் சுமார் 11 லட்சம் சதுர அடி பரப்பளவை மேம்படுத்த முடியும் என்றும், இதன் மூலம் சுமார் 450 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த புதிய திட்டத்தில், தரமான உள்கட்டமைப்பு, அழகான திறந்தவெளிகள் மற்றும் மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய நன்கு திட்டமிடப்பட்ட வீட்டு மனைகளை இந்நிறுவனம் அமைக்க உள்ளது.
கோத்ரெஜ் நிறுவனத்தின் சிறந்த வடிவமைப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறைகளை பின்பற்றி இது உருவாக்கப்படும்.இந்த இடம் தெற்கு கோயம்புத்தூரில் மக்கள் அதிகம் குடியிருக்க விரும்பும் பகுதியில்,கோயம்புத்தூர் கோல்ப் கிளப்புக்கு அருகில் அமைந்துள்ளது.இந்த நிலத்தை வாங்கியதன் மூலம் கோத்ரெஜ் நிறுவனம் முதல்முறையாக கோயம்புத்தூரில் கால் பதிக்கிறது.
மேலும்,இந்தியா முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் தங்களது தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கையை இந்நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது. இது, பொருளாதார ரீதியாக பெரிய நகரங்களில் நிறுவனத்தின் இருப்பை வலுப்படுத்துவதோடு,அவர்களின் வீட்டு மனை விற்பனைத் திட்டங்களையும் வேகமாக வளர்க்க உதவுகிறது.உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம் மற்றும் சிறு, குறு தொழில்கள் என பல துறைகளிலும் கோயம்புத்தூர் வேகமாக வளர்ந்து வருகிறது.
நகரத்தின் வலுவான உள்கட்டமைப்பு, மக்களிடம் அதிகரிக்கும் வருமானம் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி ஆகியவை இங்கு வீடுகளுக்கான தேவையை தொடர்ந்து அதிகரிக்கச் செய்கிறது. வீடுகளை நம் விருப்பப்படி கட்டிக்கொள்ளும் வசதி மற்றும் எதிர்காலத்தில் நிலத்தின் மதிப்பு பலமடங்கு உயரும் வாய்ப்பு ஆகியவற்றால், இங்கு வீட்டு மனைகளை வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இது குறித்து கோத்ரெஜ் ப்ராப்பர்டீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி கௌரவ் பாண்டே கூறுகையில்,
கோவையில் எங்களின் வீட்டு மனை மேம்பாட்டு திட்டத்தை துவக்கி இருப்பது என்பது இந்தியா முழுவதும் அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள நகரங்களில் வீட்டு மனை திட்டங்களை உருவாக்கும் எங்களது திட்டத்தின் ஒரு பகுதியாகும். இங்குள்ள சிறப்பான பொருளாதாரம் மற்றும் மக்களிடையே வீடுகளுக்கான தேவை ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் எங்களின் திட்டத்தை இங்கு துவக்கி இருக்கிறோம் என்று தெரிவித்தார்.