March 9, 2026
தண்டோரா குழு
உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு மார்ச் 8 முதல் 14 வரை தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின் அனைத்து கிளைகளிலும் குளுக்கோமா நோயாளிகளுக்கு இலவச கண் பரிசோதனை நடத்தப்படுகிறது. மேலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு 10 சதவீத கட்டண சலுகையும் வழங்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும் குளுக்கோமா பிரிவு ஆலோசகருமான டாக்டர் சித்ரா ராமமூர்த்தி, டாக்டர் ஆர்.முரளிதர், டாக்டர் ஐமன் அகமது கான் மற்றும் டாக்டர் நிரஞ்சனா பாலசுப்ரமணியம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து குளுக்கோமா நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது அவர்கள் கூறுகையில்,
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயமாக குளுக்கோமா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.இந்த நோய் ஆரம்ப கட்டத்தில் எந்த அறிகுறியும் தெரியாமல் கண் அழுத்தம் அதிகரித்து மெதுவாக பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடியது. அறிகுறிகள் தென்படாத காரணத்தால் பலர் நோயை தாமதமாகவே கண்டறிகின்றனர் என தெரிவித்தனர்.
மேலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோயாளிகள்,அதிக கிட்டப்பார்வை உள்ளவர்கள், கண் காயம் ஏற்பட்டவர்கள், கண் வீக்கம் உள்ளவர்கள், ஸ்டீராய்டு மருந்துகள் பயன்படுத்துபவர்கள் மற்றும் பிறவிக்கண் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு குளுக்கோமா ஏற்படும் அபாயம் அதிகம் என்றும் தெரிவித்தனர்.மருத்துவமனையில் கண் பரிசோதனைக்கு வரும் நோயாளிகளுக்கு கண் அழுத்தம் பரிசோதனை,கோனியோஸ்கோபி மூலம் கண் நீர் வடிகால் நிலை மதிப்பீடு, பெரிமெட்ரி மூலம் பார்வை வெளி குறைபாடு பரிசோதனை மற்றும் OCT மூலம் ரெட்டினா நரம்பு நிலை ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேவையான சொட்டு மருந்து சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் மூலம் குளுக்கோமாவால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் தீவிர குளுக்கோமா நோயாளிகளுக்கு Trabeculectomy மற்றும் Aqueous Drainage Implants போன்ற மேம்பட்ட அறுவை சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.தி ஐ ஃபவுண்டேஷன் மருத்துவமனையின் அனைத்து கிளைகளிலும் ஆண்டுதோறும் 1500-க்கும் மேற்பட்ட குளுக்கோமா அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
“குளுக்கோமா என்பது எந்த அறிகுறியும் தெரியாமல் கண்பார்வையை மெதுவாக கவரும் நோய். எனவே அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,” என தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் சித்ரா ராமமூர்த்தி தெரிவித்தார்.
உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று பயனடைய மருத்துவமனை நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் தகவல்களுக்கு மற்றும் முன்பதிவிற்கு:94422 17796 |0422 4242000