March 8, 2026
தண்டோரா குழு
சர்வதேச மகளிர் தினத்தையும் எண்டோமெட்ரியோசிஸ் விழிப்புணர்வு மாதத்தையும் முன்னிட்டு, நகரின் முன்னணி பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவச் சேவை நிறுவனங்களில் ஒன்றான ராவ் மருத்துவமனை சார்பில் ‘ராவ் மருத்துவமனை EndoMarch 2026’ எனும் 5 கி.மீ நடைப்பயணத்தின் 3-வது பதிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
பெண்களின் உடல்நலம் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் நோய் குறித்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது. மேலும், எண்டோமெட்ரியோசிஸ் சிகிச்சைக்காக மருத்துவமனை உருவாக்கியுள்ள ‘எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் மாதவிடாய் கோளாறுகளுக்கான அறக்கட்டளை’ (FEM-I) தனது மூன்றாவது ஆண்டில் நுழைந்ததையும் இந்த நிகழ்வு குறிக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், மூத்த மகப்பேறு மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவைச் சிகிச்சை நிபுணரும் எண்டோமெட்ரியோசிஸ் சிகிச்சை வல்லுநருமான டாக்டர் தாமோதர் ராவ் தலைமையில் FEM-I மையம் மூலம் 150-க்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நடைப்பயணத்தை, ஆர்.எஸ்.புரம், பி2 காவல் நிலைய ஆய்வாளர் கே.கே. நந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெண்களின் உடல்நலப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மருத்துவமனை மேற்கொண்டு வரும் முயற்சிகளை அவர் பாராட்டினார்.மேலும், நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதை ஊக்குவிக்கும் இத்தகைய முன்னெடுப்புகளுக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
பாஜக மகிளா மோர்ச்சா தேசியத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். பெண்களின் அதிகாரமளிப்பு, உடல்நல விழிப்புணர்வு மற்றும் பெண்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான கூட்டுப் முயற்சிகளின் அவசியம் குறித்து அவர் உரையாற்றினார்.
மேலும்,சமூக நலத்திற்காக ஆற்றிய சேவைகளை பாராட்டும் வகையில் ரோட்டரி மாவட்டம் 3206-இன் உதவி ஆளுநரும், கோவை ரோட்டரி ஆக்ருதி மன்றத்தைச் சேர்ந்த ARFC டாக்டர் லீமா ரோஸ் கௌரவிக்கப்பட்டார்.சுகாதாரத் துறை நிபுணர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரைக் கொண்ட 750-க்கும் மேற்பட்டோர் இந்த நடைப்பயணத்தில் பங்கேற்றனர். பங்கேற்பாளர்களுக்கு நிகழ்வுக்கான சிறப்பு டி-ஷர்ட்கள், நிறைவு செய்ததற்கான பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சி உற்சாகமான ‘ஜும்பா’ உடற்பயிற்சி அமர்வுடன் தொடங்கி, அதனைத் தொடர்ந்து நடைப்பயணம் நடைபெற்றது.பின்னர் உடலைத் தளர்வுபடுத்தும் பயிற்சிகள் மற்றும் பரிசுகளுடன் கூடிய விளையாட்டுகளுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. நடைப்பயணத்தில் வெற்றி பெற்ற சிலர் நிகழ்வின்போதே அறிவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து ராவ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும் கருத்தரிப்பு மற்றும் மகப்பேறு மருத்துவப் பிரிவின் முதன்மை ஆலோசகருமான டாக்டர் ஆஷா ராவ் கூறியதாவது:
“எண்டோமெட்ரியோசிஸ் என்பது உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பெண்களை பாதிக்கும் நாள்பட்ட நோயாகும். ஏறத்தாழ 10 பெண்களில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார். இது பெண்களின் உடல்நலம் மட்டுமின்றி அன்றாட வாழ்க்கை, கருத்தரிக்கும் திறன் மற்றும் மனநலத்தையும் பாதிக்கக்கூடும். துரதிர்ஷ்டவசமாக, பல பெண்கள் சரியான நோயறிதலைப் பெறுவதற்கு முன்பே பல ஆண்டுகள் துன்பத்தை அனுபவிக்க நேரிடுகிறது. ‘எண்டோமார்ச்’ போன்ற முன்னெடுப்புகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, ஆரம்பகட்டத்திலேயே நோயை கண்டறிவதை ஊக்குவிப்பது மற்றும் பெண்களுக்கு சிறப்பு மருத்துவச் சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம். ராவ் மருத்துவமனையில் செயல்படும் FEM-I மையத்தின் வாயிலாக, இந்நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நவீன சிகிச்சைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்,” என்றார்.
பெண்களின் உடல்நலம் தொடர்பான முக்கிய பிரச்சினைகளில் சமூக கவனத்தை ஈர்க்கும் வகையில் ‘EndoMarch’ போன்ற விழிப்புணர்வு முன்னெடுப்புகளை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் பெண்கள் நல மருத்துவச் சேவையில் ராவ் மருத்துவமனை முன்னணியில் செயல்பட்டு வருகிறது.