February 18, 2026
தண்டோரா குழு
பால் பொருட்கள் தயாரிப்பில் நாடளவில் புகழ்பெற்ற ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட் நிறுவனம், இந்தியாவில் விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் நோக்கத்தோடு, ‘ஹேப் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட்’ என்பதை நிறுவி திறம்பட நிர்வகித்து வருகிறது.
இதன் ஒரு அங்கமான ஹட்சன் பேட்மிண்டன் சென்டர் உலகப்புகழ் பெற்ற பேட்மிண்டன் பயிற்சியாளர் டத்தோ மிஸ்பன் அவர்களை தனது மையத்தில் பயிற்சி பெறும் பேட்மிண்டன் வீரர்களின் விளையாட்டுத் திறனையும், உடற்தகுதியையும் மேம்படுத்தும் சிறப்பு பயிற்சி அளிப்பதற்காக பயிற்சியாளராக நியமித்துள்ளது. பிரபல பயிற்சியாளரான டத்தோ மிஸ்பன் சிடெக் அவர்கள், உலக தர வரிசையில் முதலிடம் வகித்த ரஷித் சிடெக், ரோஸ்லின் ஹாஷிம் மற்றும் லீ சோங் வெய் ஆகிய மூன்று முன்னாள் முதன்மை வீரர்களுக்கு பேட்மிண்டன் விளையாட்டில் பயிற்சி அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹட்சன் பேட்மிண்டன் சென்டரில், தற்போதைய பயிற்சியாளர் குழுவுடன் இணைந்து மிஸ்பன் சிடெக் அவர்கள் பணியாற்றுவார்.சர்வதேச அளவிலான போட்டிகளில் இம்மையத்தில் பயிற்சி பெறும் இளம் வீரர்களும் வீராங்கனைகளும் உயர் செயல்திறனை வெளிப்படுத்தி வெற்றிவாகை சூடுவதற்கான சிறப்பு பயிற்சி முறைகளை அவர் கற்றுத்தருவார்.
டத்தோ மிஸ்பன் சிடெக் பேசுகையில்,
“ஹாட்சன் பேட்மிண்டன் மையத்தில் அமைந்துள்ள பயிற்சி உள்கட்டமைப்பு வசதிகள், தீவிரப் பயிற்சிக்கு ஏற்ற மிகச் சிறந்த சூழல்களில் ஒன்றாகத் திகழ்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா மிகச் சிறந்த பேட்மிண்டன் வீரர்களை உருவாக்கியுள்ளது; இந்த வளர்ச்சி மென்மேலும் தொடர, கட்டமைக்கப்பட்ட நீண்ட காலப் பயிற்சி மிக அவசியம். இந்த அகாடமியில் பயிற்சி பெறும் வீரர்களிடம் சிறப்பான திறனுக்கான சாத்தியம் இருப்பதை நான் காண்கிறேன். உலகத் தரவரிசையில் முதலிடம் பிடித்த மூன்று வீரர்களுக்கு பயிற்சி அளித்து உருவாக்கிய நான், எனது நான்காவது சாம்பியனைத் தேடியே இங்கு வந்துள்ளேன். இங்குள்ள வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் இணைந்து செயல்பட்டு, வீரர்களின் போட்டிக்கான தயார்நிலையையும், நிலையான ஆட்டத்திறனையும் வலுப்படுத்துவதை ஆர்வத்தோடு நான் எதிர்நோக்குகிறேன்.” என்று கூறினார்.
ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட் – ன் தலைவர் ஆர்.ஜி.சந்திரமோகன் கூறியதாவது:
“இளம் விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த பயிற்சி வசதிகளையும், இவ்விளையாட்டில் நிபுணத்துவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் உலகத்தரத்தில் பயிற்சியையும் வழங்குவதற்காகவே ஹட்சன் ஸ்போர்ட்ஸ் அகாடமி உருவாக்கப்பட்டது. பேட்மிண்டன் விளையாட்டில் உலகளவில் மிகச்சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவரை எங்கள் மையத்தின் வீரர்கள், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிப்பது, சிறந்த பலனை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நிபுணத்துவ வழிகாட்டுதலும், ஒழுக்க கட்டுப்பாட்டுடன் கூடிய பயிற்சியும் வழங்கப்படுமானால், உலகத் தரம் வாய்ந்த சாம்பியன்களை உருவாக்குவதற்கான உறுதியான அடித்தளத்தை அமைக்கும் என்ற எங்கள் நம்பிக்கையை இந்த பயிற்சியாளரின் நியமனம் பிரதிபலிக்கிறது.” மிகச்சிறந்த பயிற்சியாளரது வழிகாட்டலின் மூலம் ஹட்சன் பேட்மிண்டன் சென்டரின் பயிற்சித் தரம் பெருமளவு உயரும் என்றும், இந்திய வீரர்கள் உலகத் தரம் வாய்ந்த பயிற்சி முறைகளைப் பெற இது வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை இந்த மையத்தில் பல்வேறு பிரிவுகளில் 300+ இளம் வீரர்களும், வீராங்கனைகளும் சிறப்பான பயிற்சி பெற்று தங்கள் திறனை மேம்படுத்திக் கொண்டுள்ளனர். தற்போது உலக தரவரிசையில் 88-வது இடத்தில் இருக்கும் எஸ். ரித்விக் சஞ்சீவி, பயிற்சியாளர் டத்தோ மிஸ்பன் சிடெக் அவர்களின் வழிகாட்டுதலில் பயிற்சி பெறவுள்ள முக்கிய வீரர்களில் ஒருவர். ரித்விக், விஜயவாடாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் தமிழக வீரர் ஆவார். மேலும் இவர் மங்களூர் சர்வதேச சேலஞ்ச் மற்றும் 2024 ஓடிசா மாஸ்டர்ஸ் போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.