January 20, 2026
தண்டோரா குழு
கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களின் ‘குமரகுரு தமிழ் மன்றம்’ தனது வெள்ளி விழாவைக் கொண்டாடும் விதமாக, ‘தமிழ் அறிவுத் திருவிழா – 2026’ என்ற உன்னதமான நிகழ்வை நடத்தியது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன், கவிஞர் மற்றும் தமிழாசிரியர் திரு. நிரஞ்சன் பாரதி, தமிழை வெறும் உணர்வுப்பூர்வமாக மட்டும் அணுகாமல், அறிவுப்பூர்வமாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
நிரஞ்சன் பாரதி தனது உரையில்,
“நாம் நம் மொழியை மிகவும் காதலிக்கிறோம், ஆனால் இன்றைய சேட் ஜிபிடி (ChatGPT), கூகுள் ஜெமினி (Google Gemini) போன்ற அசுர வேகத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பக் காலத்திற்கு ஏற்ப தமிழைத் தகவமைத்துக் கொள்வது அவசியம். தமிழை ஒரு பாடமாகவோ அல்லது மதிப்பெண் வாங்கும் கருவியாகவோ மட்டும் பார்க்காமல், நவீனத் தொழில்நுட்பங்களோடு கைகோத்துச் செயல்படும் ஒரு கருவியாக மாற்ற வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.
தமிழில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்துப் பேசிய அவர், “தமிழ் சோறு போடாது என்ற பிம்பம் இன்று உடைந்துவிட்டது. ஊடகத்துறை, மொழிபெயர்ப்பு, மற்றும் செய்தி வாசிப்பு ஆகியவற்றைத் தாண்டி, ‘தமிழ் கம்ப்யூட்டிங்’ (Tamil Computing) எனும் துறையில் பெரும் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. குறிப்பாக, பெரிய மொழி மாதிரிகளை (LLMs) தமிழில் உருவாக்குவதற்கும், மத்திய அரசின் ‘பாஷினி’ (Bhashini) போன்ற செயலிகளில் மெஷின் லேர்னிங் (Machine Learning) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும் மொழி அறிவும் தொழில்நுட்ப அறிவும் கொண்ட இளைஞர்கள் தேவைப்படுகிறார்கள்,” என்று புதிய வேலைவாய்ப்புத் தளங்களைச் சுட்டிக்காட்டினார்.
தமிழ் மொழியின் தனிச்சிறப்பான ‘ழ்’ என்ற எழுத்தின் அறிவியல் மற்றும் ஆன்மிகப் பின்னணி குறித்துப் பேசுகையில், இந்த எழுத்தைச் சரியாக உச்சரிப்பது மனித உடலின் பீனியல் சுரப்பியைத் (Pineal Gland) தூண்டும் என்று வள்ளல் பெருமான் போன்ற ஞானிகள் கூறியுள்ளதை அவர் நினைவுகூர்ந்தார். மேலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த திருக்குறள் சொற்கள் இன்றும் பயன்பாட்டில் இருப்பதே தமிழ் மொழியின் தொடர்ச்சியான உயிராற்றலுக்குச் சான்று என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
நிறைவாக, “பண்டிதர்களிடமும் மன்னர்களிடமும் இருந்த தமிழை பாரதியார் எப்படித் தெருவுக்குக் கொண்டு வந்து மக்கள் மொழியாக மாற்றினாரோ, அதேபோல இன்றைய மாணவர்கள் தமிழை டிஜிட்டல் தளத்திற்கும் செயற்கை நுண்ணறிவு உலகிற்கும் கொண்டு செல்ல வேண்டும். உங்களின் புதிய கண்டுபிடிப்புகளே தமிழ் அன்னைக்குச் செய்யும் உண்மையான தொண்டு,” என்று கூறித் தனது உரையை நிறைவு செய்தார். இந்நிகழ்வில் குமரகுரு கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள், தமிழ் மன்ற நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.