September 24, 2025
தண்டோரா குழு
கோவை சகோதயா கூட்டமைப்பு பள்ளிகளின் சார்பில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான மாணவர்களுக்கான கால்பந்து போட்டிகள் கோவை சந்திரகாந்தி பப்ளிக் பள்ளியில் 23.9.2025 முதல் 25.9.2025 வரை நடைபெற்று வருகின்றன.
போட்டியை சகோதயா கூட்டமைப்புப் பள்ளிகளின் சார்பாக சந்திரகாந்தி பப்ளிக் பள்ளி முதல்வர் கருணாம்பிகேஸ்வரி துவக்கி வைத்தார். இதில் 12 ,14 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றன. அதில் 36 பள்ளிகளிலிருந்து 1098 மாணவர்கள் பங்கேற்றனர்.
கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, திண்டுக்கல், உடுமலை, மேட்டுப்பாளையம் போன்ற இடங்களிலுள்ள பள்ளிகளிலிருந்து மாணவர்கள் கலந்துகொண்டனர். மேலும் பனிரெண்டு வயதிற்குட்பட்ட பிரிவில் 29 பள்ளிகளும், பதினான்கு வயதிற்குட்பட்ட பிரிவில் 32 பள்ளிகளும் பங்கு பெற்றன.
செப்டம்பர் 23ஆம் தேதி பனிரெண்டு வயதிற்குட்பட்ட பிரிவிற்கான போட்டிகள் தொடங்கின. அதற்கான இறுதிப் போட்டிகளும், பதினான்கு வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டிகள் செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெற்றன. விளையாட்டு வீரர்கள் தங்கள் முழுத் திறமைகளை மைதானத்தில் வெளிப்படுத்தினர்.
பனிரெண்டு வயதிட்குட்பட்டோர் பிரிவில் விவேகம் சீனியர் செகண்டரி பள்ளி முதலிடத்திலும், SSVMபள்ளி மேட்டுப்பாளையம் இரண்டாமிடமும், கேம்போர்டு இண்டர்நேசனல்பள்ளி மூன்றாமிடத்தையும், CS அகாடமி கோயமுத்தூர் நான்காவது இடத்தையும் பெற்றுள்ளன.
பனிரெண்டு வயதிற்குட்டப்பட்டோர் பிரிவில் சிறந்த கால்பந்து வீரனாக விவேகம் சீனியர் செகண்டரி பள்ளி மாணவன் நோவா சித்தார்த், மற்றும் சிறந்த கோல்கீப்பராக SSVM பள்ளி மேட்டுப்பாளையம் மாணவன் தேவ் கிஷோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். போட்டியில் பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.
14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டிகளும் இறுதிப் போட்டிகளும் 25.09.2025 அன்று நடைபெற உள்ளது. அந்த மாணவர்கள் தங்களது முழுத் திறமைகளை வெளிக்காட்ட மிக ஆர்வமுடன் திகழ்கின்றனர்.
கால்பந்து போட்டிகளின் ஆய்வாளராக அன்னூர் நவபாரத் பள்ளியைச் சார்ந்த கணேஷ் அவர்களை நியமித்து இருந்தனர். சர்வதேச அங்கீகாரம் பெற்ற கால்பந்து பயிற்சியாளர் ஶ்ரீ கிருஷ்ணா தலைமையின்கீழ் கோவை கால்பந்து சங்கத்திலிருந்து 15 நடுவர்கள் கால்பந்து போட்டியை சிறப்பாக நடத்த உதவி புரிந்தனர்.