September 19, 2025
தண்டோரா குழு
கோவை நேரு கல்விக்குழுமம் சார்பில் தேசிய அளவிலான புதிய கண்டுபிடிப்பாளர் மாநாடு 2025 இன்று கோவை பாலக்காடு சாலையில் திருமலையாம்பாளையத்தில் உள்ள நேரு கல்லூரி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வளாகத்தில் நடைபெற்றது.
நிறைவு விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் டாக்டர் வி. நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மாநாட்டில் இஸ்ரோ தலைவர் நாராயணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசும்போது,
சந்திரயான்-3 திட்டம் 100 சதவீதம் வெற்றி அடைந்ததால் இந்தியா வரலாற்று சாதனை படைத்தது.6,500 கிலோ எடை கொண்ட அமெரிக்காவின் தொடர்புதுறை ராக்கெட் இந்தியாவின் ராக்கெட்டுடன் இணைத்து விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளது.ஒரு நாட்டின் முன்னேற்றம் புதுமையான படைப்புகளை படைப்பதில் உள்ளது. விண்வெளி ஆராய்ச்சி துறையில் மற்ற நாடுகளை சார்ந்து செயல்பட்டோம்.
தற்போது வளர்ந்த நாடுகளுக்கும் மேலாக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளோம். இதை இனிவரும் 50 ஆண்டுகளுக்கு யாராலும் முறியடிக்க முடியாது.நாடு சுதந்திரம் பெறும் முன் 97.5 சதவீத மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தனர். இவர்களது சராசரி ஆயுள் காலம் 32. கடந்த 50 ஆண்டுகளில் அந்த சராசரி 71 சதவீதமாக உயர்ந்துள்ளது வெண்மை புரட்சி, நீல புரட்சி என அனைத்திலும் நாம் வளர்ந்துள்ளோம்.கல்வி ஒன்றே நமக்கு வளர்ச்சியை தரும் என்றார்.
விழாவிற்கு பி.கே.தாஸ் பல்கலைக்கழக வேந்தர்,நேரு கல்விக் குழுமத் தலைவர், நிர்வாக அறங்காவலர் மற்றும் இந்தியா – மொரிசியஸ் நாடுகளின் கௌரவ வர்த்தக ஆணையர் முனைவர்.பி.கிருஷ்ணதாஸ் தலைமை தாங்கினார்.
பி.கே. தாஸ் பல்கலைக்கழக சார்பு வேந்தர்,நேரு கல்விக் குழும தலைமைச் செயல் அதிகாரி மற்றும் செயலாளர் முனைவர்.பி.கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்.
கௌரவ விருந்தினராக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (புது டில்லி), தொழில்நுட்ப மொழிபெயர்ப்பு மற்றும் புதுமைப் பிரிவு ஆராய்ச்சியாளர் டாக்டர் ரவீந்தர் கவுர் பங்கேற்றார்.பி.கே.தாஸ் பல்கலைக்கழக பரிந்துரைக்கப்பட்ட துணை வேந்தர்,நேரு கல்விக் குழும கல்வி மற்றும் நிர்வாக செயல் இயக்குநர் முனைவர். எச்.என்.நாகராஜா வாழ்த்துரை வழங்கினார்.
முன்னதாக நடைபெற்ற தொடக்க விழாவில் கோயம்புத்தூர் தொழில்முனைவோர் அமைப்பு தலைவர் அர்ஜுன் பிரகாஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.வாழ்த்துரையை அதே அமைப்பின் ஆளும் குழு உறுப்பினர் மற்றும் பட்டய உறுப்பினர் எம்.பிரேம்குமார் வழங்கினார். வரவேற்புரையை பி.கே. தாஸ் பல்கலைக்கழக பரிந்துரைக்கப்பட்ட பதிவாளர் முனைவர். பி.அனிருதன் வழங்கினார்.
மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து சுமார் 1000 ஸ்டார்ட்-அப் நிறுவன கண்டுபிடிப்பாளர்கள் பங்கேற்றனர். 100-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. அதில் சுகாதாரம்,சுற்றுச்சூழல், போக்குவரத்து, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் 35-க்கும் மேற்பட்ட புதுமையான திட்டங்கள் கவனம் பெற்றன.
காலை அமர்வில் டை கோயம்புத்தூர் ஆளும் குழு உறுப்பினர் எம்.பிரேம்குமார் வாடிக்கையாளர் மதிப்பு புதுமை குறித்து உரையாற்றினார்.பிற்பகல் அமர்வில் ரைட் டாட்ஸ் நிறுவனர் அனுஜா பஷீர் பிராண்ட் சக்தி மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகள் குறித்து பேசியார்.
மாநாட்டிற்கான ஒருங்கிணைப்பை நேரு கல்விக் குழும தொழில்நுட்ப வணிக காப்பகம் இயக்குநர் பி.வைகுண்ட செல்வம் செய்திருந்தார்.