September 18, 2025
தண்டோரா குழு
கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் “ஸ்ருஷ்டி 2025” என்ற கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை கோவையில் 2025 செப்டம்பர் 18 முதல் 20 வரை, கோவை அவிநாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.இந்த கண்காட்சி தினமும் காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்களுக்காக திறந்திருக்கும்.
38 ஆண்டுகளாக கைவினைக் கலைஞர்கள் மற்றும் நெசவாளர்களின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு கைவினைக் குழு செயல்படுகிறது.இந்த அமைப்பு சென்னை இந்திய கைவினைக் குழு மற்றும் .உலக கைவினைக் குழு ஆகியவை உடன் இணைந்து செயல்படுகிறது.
“ஸ்ருஷ்டி 2025” நிர்வாகக் குழு மற்றும் உறுப்பினர்களால் ஒழுங்குபடுத்தப்படும் இந்தக் கண்காட்சி, கடந்த 27 ஆண்டுகளாக கோவை மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கைவினைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து பணியாற்றும் வடிவமைப்பாளர்களின் தனித்துவமான படைப்புகள் இங்கே காட்சிப்படுத்தப்படுகின்றன. இந்த கண்காட்சியில் பூர்வீக நெசவுகள் மற்றும் கைவினைத்திறனைக் கொண்டாடும் நோக்கில், ஜவுளி, புடவைகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அணியும் ஆடைகள், விலையுயர்ந்த நகைகள், வீட்டு அலங்காரம், வீட்டு துணி, வாழ்க்கை முறை ஆபரணங்கள் என பல கைவினைப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாண்டு முதல் முறையாக பல புதிய லேபிள்கள் அறிமுகமாகின்றன. மேலும், கோவை வாடிக்கையாளர்களின் கவரும் வகையில் சுவைமிகுந்த உணவுகளுடன் 6 உணவு ஸ்டால்களும் அமைக்கப்பட்டுள்ளள.
“ஸ்ருஷ்டி 2025” கண்காட்சி, தமிழ்நாடு கைவினைக் குழு, ஆண்டு முழுவதுமான செயல்பாடுகளுக்கான நிதி ஆதாரங்களை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இங்கிருந்து பெறப்படும் வருமானம், கோவையில் நடைபெறும் வருடாந்திர கைவினைப் பஜாரில் கைவினைஞர்களுக்கு வழங்கப்படும் மானிய நிதியாக பயன்படுத்தப்படுகிறது.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில், கண்காட்சியை பார்வையிடும் வாடிக்கையாளர்கள், தங்கள் சொந்த பைகளை கொண்டு வர வேண்டும் என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.