• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு மனோக்கியநாத சுவாமி திருக்கோவில்

April 20, 2017 findmytemple.com

சுவாமி : அருள்மிகு மனோக்ஞநாத சுவாமி, நீலகண்டேஸ்வரர்.

அம்பாள் : அருள்மிகு அநூபமஸ்தனி.

மூர்த்தி : பக்தாபீஷ்டதாயினி, பஞ்சமூர்த்தி, பிரம்ம லிங்கம், விசுவநாதர், மகாலட்சுமி, பைரவர், நவக்கிரகம்.

தீர்த்தம் : தேவி தீர்த்தம்.

தலவிருட்சம் : பஞ்ச வில்வம், பலாமரம்.

தலச்சிறப்பு :

இத்தலத்தில் அதிசயம் என்ன என்றால் இங்குள்ள நீலகண்டேஸ்வரர் ஆலகால விஷத்தை உண்டதினால் அவர் தொண்டையில் தங்கி இருந்த அந்த விஷத்தன்மையைக் குறைக்க நல்லெண்ணை லிங்கத்தின் மீது ஊற்றி அபிஷேகம் செய்கிறார்கள். அத்தனையும் சிவலிங்கத்திற்கு உள்ளேயே உறிஞ்சப்பட்டு விடுவது அதிசயமாக உள்ளது. நாள் பூராவும் எண்ணை அபிஷேகம் செய்தாலும் அத்தனை எண்ணையையும் லிங்கத்தினால் உறிஞ்சப்பட்டு விடுகிறது. தொடரும் அதிசயம் என்ன என்றால், எத்தனை எண்ணை ஊற்றி அபிஷேகம் செய்தாலும், அதை துணியினால் துடைப்பது இல்லை, தண்ணீர் ஊற்றி அலம்புவது இல்லை. ஊற்றப்படும் எண்ணையும் கீழே வழிவதே இல்லை. லிங்கமே அதை உறிஞ்சி விடுகிறது. மறுநாள் சென்று பார்த்தால் எண்ணெய் ஊற்றிய அடையாளமே தெரியாமல் லிங்கம் உலர்ந்து காணப்படும். அபிஷேகம் செய்யப்படும் எண்ணைய் அனைத்தும் எங்கு சென்று மறைகின்றது என்பது இத்தனை காலமும் யாருக்கும் புலப்படவில்லை. எண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்டுக் கொண்டே இருந்தாலும் சிவலிங்கம் வழுவழுப்பாக இருப்பதற்கு மாற்றாக சொர சொரப்பாகவே உள்ளது. அங்கு உள்ள லிங்கத்துக்கு அபிஷேகம் செய்த எண்ணையை உட்கொண்டால் தீராத நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை. மூலவருக்கு அபிஷேகம் செய்யும் எண்ணெய் பாணத்திற்கு உள்ளே சென்றுவிடும். அம்பாளே சுவாமிக்குத் தைலாபிஷேகம் செய்வதாக ஐதீகம். இங்கு உள்ள பலாமரத்தின் சுளையை சுவாமிக்குப் படைக்காமல் வெளியில் எடுத்து சென்றால் கெட்டுவிடுகிறது. மிருத்யு தோஷம், ராகு தோஷம் ஆகியவற்றை நிவர்த்திக்கும் தலம்.

தல வரலாறு :

மிருகண்டு என்கின்ற முனிவர் அவரது மனைவிக்கு புத்திர பாக்கியம் கிடைக்க, சிவனை வழிபட்டு வந்தார். அவர் பக்தியை மெச்சிய சிவனும் அவர் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் ”கேள் நல்ல குணங்களைக் கொண்ட மகனா? இல்லை தூய உள்ளம் கொண்ட மகனையா?” எனக் கேட்க முனிவரும் தனக்கு நல்ல குணம் உடைய மகனே வேண்டும் என்றார். ஆகவே அவருக்கு நல்ல குணமுடைய மகன் பிறப்பான் எனவும், ஆனால் அவன் வயது பதினாறு வருடமே உயிருடன் இருப்பான் எனவும் கூறி அவருக்கு புத்திர பாக்கியம் தந்துவிட்டு மறைந்தார். பிறந்த குழந்தைக்கு மார்கண்டேயர் எனப் பெயரிட்டு வளர்த்தனர். சிவபெருமானின் அருளால் பிறந்த மார்க்கண்டேயர் சிறந்த சிவபக்தராக விளங்கினார். அவருக்கு 16 வயது ஆனது. இனி தனக்கு ஆயுள் முடிய உள்ளது என்பதை பெற்றோர் மூலம் அறிந்து கொண்டவர், தன்னுடைய ஆயுள் முடியக் கூடாது என எண்ணினார். அதற்கு ஒரே வழி மீண்டும் சிவபெருமானை வேண்டுவதே என எண்ணிய மார்க்கண்டேயர் ஒவ்வொரு சிவஸ்தலமாக சென்று அங்கிருந்த சிவ பெருமானை தரிசித்து வேண்டி வந்தார். அப்போது தான் அவர் திருநீலக்குடி தலத்திற்கும் வந்து ஈசனை வழிபட்டார். அங்கு வந்து கடுமையாக விரதம் அனுஷ்டித்து சிவபெருமானை தியானிக்க சிவனார் அவர் முன் தோன்றினார். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க மார்க்கண்டேயர் தன்னுடைய ஆயுளை நீடிக்க வேண்டும் என வேண்டினார். அதைக் கேட்டு மகிழ்ந்த சிவபெருமானும் மார்க்கண்டேயார் அந்த தலத்தில் என்றுமே பதினாறு வயதுடைய இளைஞனாகவே இருக்கட்டும் என வரம் அளித்தார். மார்க்கண்டேயரும் அங்கேயே தங்கி சிவனை வழிபட்டு வந்தார்.

அதன் பின் அமிர்தம் கிடைக்க பெற வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது அதில் இருந்து வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டார். அது அவர் வயிற்றுக்குள் செல்லாமல் தடுக்க பார்வதி தேவி அவரின் கழுத்தை எண்ணைப் போட்டு தடவி விட விஷம் அவர் கழுத்தில் தங்கியது, வயிற்றுக்குள்ளே இறங்கவில்லை. ஆகவேதான் இங்குள்ள இறைவன் நீலகண்டேஸ்வரர் என்று பெயர் பெற்றார். இந்த தலத்தில் பிரம்மா, வசிஷ்டர் போன்றவர்கள் வந்து சிவனை வழிபாட்டு உள்ளனராம். ஆலயத்தின் அருகில் நான்கு புனித தீர்த்தங்கள் உள்ளன.

வழிபட்டோர் : மார்க்கண்டேயர், பிரம்மா, வசிஷ்டர்.

பாடியோர் : அப்பர்.

நடைதிறப்பு : காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

பூஜை விவரம் : நான்கு கால பூஜை.

திருவிழாக்கள் :

சித்திரை மாதம் சித்திரைப் பெருவிழா,

சுவாமி ஏழூர் செல்லும் சப்தஸ்தானப் பெருவிழா.

அருகிலுள்ள நகரங்கள் : கும்பகோணம்.

கோயில் முகவரி : அருள்மிகு மனோக்ஞநாத சுவாமி திருக்கோவில்,திருநீலக்குடி அஞ்சல் –612 108, (வழி) கும்பகோணம், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சை மாவட்டம்.

மேலும் படிக்க