• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில்

December 17, 2018 findmytemple.com

சுவாமி : புஷ்பவனேஸ்வரர், ஆதிபுராணர், பொய்யிலியர்.

அம்பாள் : சௌந்தரநாயகி, அழகாலமர்ந்த நாயகி.

மூர்த்தி : விநாயகர், வீணாதர தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், சப்தமாதர்கள்.

தீர்த்தம் : சூரியதீர்த்தம், காசிபதீர்த்தம், கங்கை, காவிரி, அக்னி தீர்த்தம்.

தலவிருட்சம் : வில்வம்.

தலச்சிறப்பு :

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இத்தலம் 11வது தலம் ஆகும். இத்தலத்தின் ராஜ கோபுரம் ஐந்து நிலைகளை கொண்டு கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே சென்றதும் பஞ்சமூர்த்தி மண்டபம் உள்ளது. கொடிமரம் இல்லை, பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளது. நந்தி மண்டபத்தில் இருக்கும் பெரிய நந்தி சற்றே பள்ளத்தில் சுவாமி சந்நிதிக்கு நேராக இல்லாமல் விலகியுள்ளது.

வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள் அருள்பாலிக்கிறாள். இரண்டாவது உள்வாயிலைத் தாண்டியதும் வசந்த மண்டபம். கொடிமரம், பலிபீடம், உள்ளது. இங்கும் நந்தி சுவாமி சந்நிதி விட்டு விலகியுள்ளது. இத்தலத்தில் அப்பர் உழவாரத் தொண்டு செய்த தலம் என்பதால், காலால் மிதிக்க அஞ்சி வெளியில் நின்ற திருஞானசம்பந்தருக்கு இறைவன் நந்தியை விலகச் செய்து காட்சி கொடுத்ததாக தலபுராணம் கூறுகிறது. சுவாமி சந்நிதிக்குத் தென்புறம் சோமாஸ்கந்த மண்டபம் அடுத்து நடராசர் சபையும் அமைந்துள்ளது. உள் பிராகாரத்தில் விநாயகர், சப்தமாதர்கள், நால்வர் சந்நிதிகள் உள்ளன.

மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து சென்றால் கருவறையில் மூலவர் புஷ்பவன நாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோஷ்ட மூர்த்தங்களில் வீணாதர தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர் உள்ளனர். அசுரனை அழித்த பாவத்தைப் போக்க ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் துர்க்கை, அமர்ந்த கோலத்தில் அப்பர்பெருமானும் உள்ளனர். இத்தலத்தில் முருகன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தலத்து முருகனை புகழ்ந்து அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார்.

காசிப முனிவர் கங்கையை இத்தலத்தில் உள்ள கிணற்றில் வரவழைத்து அந்த நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து அருள் பெற்றார். திருஞானசம்பந்தர் அப்பரைக் காண இத்தலத்திற்கு வந்தபோது திருஞானசம்பந்தரின் பல்லக்கை அப்பர் பெருமான் தன் தோளிற் சுமந்த தலம். மேலும் அப்பர் அடிகளார் திருமடம் அமைத்து திருப்பணி செய்த தலம் ஆகும். திருவையாறைத் தலைமை கோவிலாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில் புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில் ஆறாவது தலம் ஆகும்.

தல வரலாறு :

முன்னொரு காலத்தில் அகத்தியர் காவிரியை தன் கமண்டலத்தில் அடைத்து வைத்தார். அந்த கமண்டலத்தை காகம் கவிழ்த்தது. அதிலிருந்து தோன்றிய காவிரியான ஆறாக கிழக்கு நோக்கி ஓடி, செந்தலையிலிருந்து அந்திலி, வெள்ளாம்பிரம்பூர், ஆற்காடு, கண்டியூர், திருச்சோற்றுத்துறை, திருப்பழனம், திருவையாறு, திருநெய்த்தானம், சாத்தனூர் வரை சூழ இடைப்பட்ட இடங்களில் கடல்போல் நீர் தேங்கி நின்றுவிட்டது. இதற்கிடையில் உள்ள கோனேரிராஜபுரம், கருப்பூர், நடுக்காவேரி, திருவாலம்பொழில், திருப்பூந்துருத்தி முதலிய ஊர்கள் எல்லாம் நீர்நிலையில் மூழ்கி இருந்தன. இந்திரன் சிவபெருமானை (ஐயாறப்பரை) வழிபட்டு காவிரியை அவர் அருளால் கிழக்கு நோக்கி அழைத்துச் சென்று கழுமலப் பூங்காவை வளப்படுத்தினான். அதன்படி காவிரி கிழக்கு நோக்கி ஓடும் போது முதலில் காணப்பட்ட நிலப்பகுதி கண்டியூர். பின்னர் ஆற்று மணல் படிந்ததாய் தோன்றியது திருப்பூந்துருத்தி. அதற்கு மேற்கே ஆலமரம் இருந்ததால் காவிரி எக்கல் நிறைந்து மேடிட்ட பகுதி நிலம் மென்மையாக பூப்போல இருந்ததால் இந்நிலப்பரப்பு “பூந்துருத்தி” என்று அழைக்கப்பட்டது.

கௌதம முனிவரின் சாபத்தால், இந்திரன் உடம்பெல்லாம் ஆயிரம் குறிகள் தோன்றப் பெற்றான். சாபம் நீங்க திருக்கண்ணார் கோயிலில் வழிபட்டு பிறருக்கு கண்களாக தெரியும் வரம் பெற்றான். உடலெல்லாம் கண்ணாக தோன்றிய நோய் குணமாக வேண்டி பல தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தான். அப்பொழுது இத்தலத்தில் “பூவின் நாயகனாய்” விளங்கிய சிவபெருமானை மலர்கள் கொண்டு வழிபாடு செய்து நோய் நீங்கி, மலர் போல் தூய நல்லுடல் பெற்றான் என்பதால் “பூந்துருத்தி” என்ற பெயர் ஏற்பட்டது என்பது வரலாறு. தேவர்கள் அனைவரும் மலர்கொண்டு இத்தல இறைவனை வழிபட்டதால் இப்பெயர் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. இதனை “வானோருலகமெல்லாம் வந்திறைஞ்சி மலர்கொண்டு நின்று போற்றும் வித்தானை’ என்று அப்பர் பாடல் மூலம் அறியலாம். திருமாலும், திருமகளும் இத்தல இறைவனை வழிபாடு செய்தனர் என்பதை நாயக்க மன்னர் காலத்தில் கட்டப்பெற்ற ராஜகோபுரத்தில் உள்ள சிற்பம் எடுத்துகாட்டுகிறது. பூமகள் வழிபட்டதால் “பூந்துருத்தி” என பெயர் வந்தது என்றும் கூறப்படுகிறது. திருமழபாடி நந்திதேவர் திருமணத்திற்கு மலர்கள் தந்து உதவியதால், அதற்கு நந்திதேவர் வந்து நன்றி கூறிவதாகவும் அமைந்த விழாவே “ஏழூர் வலம் வரும் விழா” (சப்த ஸ்தான விழா) என்பர்.

வழிபட்டோர் : இந்திரன்.

பாடியோர் : திருநாவுக்கரசர் , அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள்.

நடைதிறப்பு : காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

திருவிழாக்கள் : சப்த ஸ்தான விழா, கந்தசஷ்டி, மகா சிவராத்திரி, பாரிவேட்டை.

அருகிலுள்ள நகரம் : தஞ்சாவூர்.

கோவில் முகவரி : அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில்,திருப்பந்துருத்தி – அஞ்சல் (வழி) கண்டியூர் – 613 103 திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

மேலும் படிக்க