• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோவில்

November 17, 2018 findmytemple.com

சுவாமி : பார்வதீஸ்வரர்.

அம்பாள் : சாந்தநாயகி.

மூர்த்தி : முருகன், பெருமாள்.

தீர்த்தம் : அக்னி, கங்கா.

தலச்சிறப்பு :

பார்வதீஸ்வரர் திருக்கோவில் விக்கிரம சோழன் காலத்தில் கட்டப்பட்டது. குலோத்துங்க சோழனுக்கு நீண்ட காலமாக குழந்தைச் செல்வம் இல்லை. எனவே இத்தலத்தின் அம்மனை வேண்டினான். அம்மன் அருளால் குழந்தை வரம் கிடைக்கப் பெற்றான். உடனே அம்மனுக்கு கொலுசு அணிவித்து வேண்டுதலை நிறைவேற்றினான் மன்னன். இன்றும் அம்மன் கால்களில் கொலுசுகளுடன் அருள்பாலிக்கிறாள். இத்தலத்தில் சூரியன், சந்திரன் அருகருகே காட்சி தருவது சிறப்பு ஆகும். எனவே இத்தலத்தில் வந்து வழிபட்டால் கிரகதோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் திருமணக் கோலத்தில், சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரியுடன் காட்சி தருவது சிறப்பு ஆகும். எனவே இத்தலத்து இறைவனை வழிபட்டால், திருமண யோகம் உண்டாகும் என்பது நம்பிக்கை. தினமும் நாகலிங்கப் பூக்களால் அர்ச்சனை நடைபெறுவது இத்தலத்தின் தனிச் சிறப்பு ஆகும்.

பார்வதிதேவியால் உருவாகி, பார்வதிதேவியின் வேண்டுதலுக்கு இணங்க இடப்பக்கத்தை வழங்கிய காரணத்தால், இத்தல இறைவன் பார்வதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இறைவி பாவம் தீர தவம் செய்ததால் தவக்கோல நாயகி என்றும், உக்கிர கோலம் கொண்டு, பிறகு சாந்தம் அடைந்ததால், சாந்த நாயகி என்றும் அழைக்கப்படுகிறாள். மேலும் அம்பிகைக்கு லலிதாம்பிகை என்ற ஒரு பெயரும் உண்டு. பெருமாள் ஸ்ரீ ஆதிகேசவன் என்னும் திருநாமத்துடன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு :

மதலோலை எனும் அரக்கி துர்வாச முனிவரின் தவத்தைக் கலைத்ததால் முனிவர் கோபம் கொண்டு அரக்கிக்கு சாபம் கொடுத்தார். சாபத்தின் விளைவாக அம்பரன், அம்பன் ஆகிய அசுரக் குழந்தைகளைப் பெற்றெடுத்த மதலோலை, ஈன்றதும் இறந்து போனாள். அம்பரன், அம்பன் இரண்டு அசுரர்கள் வளர்ந்து பெரியவர்களானதும், தேவர்களுக்கு பல கொடுமைகள் செய்தனர். இதனால் தேவர்கள் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்தனர். சிவபெருமான் புன்னகையுடன் தன் தேவியைப் பார்த்தார். ஈசனின் குறிப்பறிந்த பார்வதிதேவி, அசுரர்களை அழிக்க, அழகிய கன்னிப் பெண்ணாக உருவெடுத்து, அரக்கர்கள் முன் தோன்றினாள். இரண்டு அசுரர்களும் கன்னிப் பெண்ணாக உருவெடுத்த அம்பாள் மீது மையல் கொண்டனர். அப்பொழுது வயோதிக அந்தணராக வந்த பெருமாள் அசுரர்களிடம் சென்று, ஒரு பெண்ணை நீங்கள் இருவரும் எப்படிச் சொந்தமாக்கிக் கொள்ள முடியும். எனவே உங்களில் வலிமையான ஒருவருக்கே அவள் சொந்தமாவாள் என்று கூறினார். பின்பு அசுர சகோதரர்களுக்கு இடையே பலப்பரீட்சை ஏற்பட்டது. அம்பன் அழிந்தான்; அம்பரன் ஜெயித்தான். அம்பாளைத் தேடி வந்தான். அப்போது, மகா காளியாக உருவெடுத்து நின்றாள் அம்பாள். பயந்து போன அசுரன், வடக்கு நோக்கி ஓடினான், அவனைத் துரத்திச் சென்று, தனது சூலாயுதத்துக்கு இரையாக்கினாள் அம்பாள். அசுர வதம் முடிந்ததும், உக்கிரம் தணிந்து, மீண்டும் ஈசனின் இடப்பாகம் அடையவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் பெருமாள். தேவியும் உக்கிரம் தணிந்து, அருகில் இருந்த சந்தனமரக் காட்டுக்கு வந்து, மண்ணில் லிங்கம் பிடித்துவைத்து வழிபட்டாள். உரிய காலம் வந்ததும் சிவபெருமான் தோன்றி, அம்பாளை தன் இடப்பாகத்தில் ஏற்றுக்கொண்டார்.

வழிபட்டோர் : பார்வதிதேவி.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

திருவிழாக்கள் : வைகாசி பிரம்மோற்ஸவம்.

அருகிலுள்ள நகரம் : மயிலாடுதுறை.

கோவில் முகவரி : அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோவில்,இஞ்சிக்குடி, திருவாரூர்.

மேலும் படிக்க