• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றி!

December 10, 2018 தண்டோரா குழு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 6ம் தேதி துவங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் தொடக்க வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் தடுமாறிய நிலையில், புஜாரா நிலைத்து நின்று 123 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 250 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, விளையாடிய ஆஸ்திரேலியா அணி வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார். இறுதியில், 235 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி தரப்பில் பும்ரா, அஷ்வின் தலா 3 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா, சமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 15 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 307 ரன்களை எடுத்து 323 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயித்தது.

இதையடுத்து, 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது. எனினும்,தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணியின் பிஞ்ச்(11) மார்கஸ் ஹாரிஸ் (26), கவாஜா (8) ஆகிய ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் அஸ்வின், ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்களை எடுத்தது.

இந்நிலையில் இன்று 5ம் நாள் ஆட்டம் துவங்கியது. ஆஸ்திரேலிய அணியின் மார்ஷ் அரைச்சதம் அடித்து நிலையாக நின்றார். பின்னர் கம்மின்ஸ் மற்றும் பெய்ன் ஆகிய இருவரையும் பும்ரா வெளியேற்றினார். எனினும் கடைசியில் இறங்கிய நேதன் லயன் நிலைத்து நின்று விளையாட போட்டி டிராவை நோக்கிச் சென்று விடுமோ என்ற பரபரப்பு நிலவியது. ஆனால், அஸ்வின் கடைசி விக்கெட்டை எடுக்க இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பும்ரா, சமி, அஷ்வின் ஆகிய மூவருமே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.

இதுமட்டுமின்றி ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை இந்தியா டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றதே இல்லை என்ற நிலையை இந்திய அணி மாற்றியுள்ளது.

இந்த வெற்றி மூலம் அடிலெய்டு மைதானத்தில் இந்திய அணி 15 ஆண்டுகளுக்குப் பின் வெற்றியை சுவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க