April 28, 2026
தண்டோரா குழு
“உயிரைப் பாதுகாக்க சீட் பெல்ட் அணியுங்கள் ” என்ற வாசகத்தை மையமாகக் கொண்டு,பாதுகாப்பு வாரப் பிரச்சாரத்தை சூயஸ் நிறுவனம் வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது.
அனைத்து திட்டப் பகுதிகளிலும் பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்துவதும், சீட் பெல்ட் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதுமே இதன் முக்கிய நோக்கம் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பான பணியிடத்தை உருவாக்குவதற்கான கூட்டுப் பொறுப்பைப் வலியுறுத்தும் வகையில், பணியாளர்கள், களப் பணியாளர்கள், ஓட்டுனர்கள் மற்றும் ஆலை உபகரணங்களை இயக்குபவர்கள் ஆகியோர் இந்தப் பிரச்சாரத்தில் தீவிரமாகப் பங்கேற்றனர்.இதில் சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு பல்வேறு விழிப்புணர்வு அமர்வுகள் நடத்தப்பட்டன.
வாகனங்களை திடீரென நிறுத்துதல், வாகனங்கள் மோதல் மற்றும் வாகனம் கவிழும் நேரங்களில் சீட் பெல்ட்கள் பயணிகளை எவ்வாறு பாதுகாக்கின்றன என்பதை விளக்கும் செய்முறை விளக்கங்களும் அளிக்கப்பட்டன. சாலைப் பாதுகாப்பிற்கான ‘உயிர்’ அறக்கட்டளையின் அறங்காவலரும், கோயம்புத்தூர் மாவட்ட சாலைப் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினருமான டாக்டர் எஸ். சந்திரசேகர் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசுகையில், சீட் பெல்ட் பயன்பாட்டின் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.
மேலும் சீட் பெல்ட் அணியாததால் ஏற்படும் விளைவுகளைத் தெளிவாக விளக்கினார். இந்த எளிமையான பாதுகாப்பு நடவடிக்கையின் மூலம் சாலையில் ஏற்படும் பல உயிரிழப்புகளையும், படுகாயங்களையும் தடுத்திருக்க முடியும் என்பதை அவரது கருத்துகள் வலியுறுத்தின.சீட் பெல்ட் அணிவது என்பது வெறும் விதிமுறை அல்ல; அது உயிர்களைப் பாதுகாக்கும் ஒரு தனிப்பட்ட பொறுப்பு என்பதை இந்த அமர்வுகள் வலியுறுத்தின. கோயம்புத்தூர் சூயஸ் – 24×7 குடிநீர் வினியோகத் திட்டத்தின் திட்ட இயக்குனர் சங்க்ராம் பட்டநாயக் பேசுகையில், சீட் பெல்ட் பயன்பாட்டைத் தவிர்க்க முடியாத ஒரு பாதுகாப்புப் பழக்கமாகப் பின்பற்ற வேண்டும் என்றார்.
வாகனத்தில் உள்ள அனைவரும் சரியான முறையில் சீட் பெல்ட் அணிந்திருந்தால் மட்டுமே வாகனத்தை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். திட்ட வளாகங்களுக்குள்ளும், பொதுச் சாலைகளிலும் சீட் பெல்ட் பாதுகாப்பைப் பின்பற்றவும், அதை ஊக்குவிக்கவும் பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.