August 10, 2016
தண்டோரா குழு
பண்டிகை காலங்களில் விமான நிறுவனங்கள் விமான பயணத்தில் சிறப்பு சலுகை அளித்துவருவது வழக்கம். அந்த வகையில் தனியார் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், சுதந்திர தினத்தை முன்னிட்டு உள்நாடு மற்றும் வெளிநாடு விமான போக்குவரத்தில், சில குறிப்பிட்ட பாதைகளில் சிறப்பு கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது.
இதன்படி, 399 ரூபாய் சலுகை கட்டணத்தில் உள்நாட்டுப் போக்குவரத்து விமான டிக்கெட் வழங்கப்படுகிறது. அதில், அகமதாபாத் – மும்பை, அமிர்தசரஸ் – ஸ்ரீநகர், மும்பை – ஐதராபாத், மும்பை – கோவா, கோவை – ஐதராபாத், பெங்களூரு – கொச்சி, பெங்களூரு – சென்னை ஆகிய வழித்தடங்களில் மட்டும் இந்த கட்டணச் சலுகையில் பயணிக்கலாம் என்று ஸ்பைஸ்ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கான புக்கிங் தேதி ஆகஸ்டு 9 முதல் 11 வரை ஆரம்பமாகிறது. இந்தச் சலுகை மூலம் ஆகஸ்டு 18 முதல் செப்டம்பர் 30 வரை பயணம் செய்யலாம் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதே போல், சர்வதேச அளவில் துபாய் – டெல்லி மற்றும் துபாய் – மும்பை ஆகிய வழித்தடங்களுக்கு கட்டணச் சலுகையாக 2,999 ரூபாய்க்கு விமான டிக்கெட் வழங்கப்படுகிறது. அடிப்படை கட்டணமாக இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனுடன் வரிகள் கூடுதலாக சேரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.