November 13, 2017
தண்டோரா குழு
சேலத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ரவிக்குமார். இவர் கடந்த 1ம் தேதி சேலம் விரைவு ரயிலில் சென்னை சென்றார். அப்போது, அவர் கொண்டுவந்த பெட்டியில் உள்ள பணத்தை தவறவிட்டுள்ளார். சென்னை எழும்பூர் சென்றதும் கொண்டுவந்த பெட்டியில் பணம் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து எழும்பூர் ரயில்வே போலீஸாரிடம் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் உள்ள பணத்தை எடுத்த பொய்யாமொழி போலீஸில் ஒப்படைத்தார்.
எனினும் அந்த பையில் 10.75 லட்சரூபாயில் 5.75 லட்சம் மட்டுமே இருந்துள்ளது. இதையடுத்து ரயில்வே போலீஸார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார்கள். அப்போது மர்மநபர் ஒருவர் அதில் இருந்த பணத்தை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.இதனைத் தொடர்ந்து பணத்தைக் கொண்டுவந்து கொடுத்த முதியவர் பொய்யாமொழிக்கு ரயில்வே நிர்வாக ஆர்டிஓ பரிசு ஒன்றையும் வழங்கினார்.
பொய்யாமொழி, திராவிடக் கொள்கையைப் பின்பற்றுபவர். அடுத்தவரின் உடைமைக்கு ஆசைப்படாதவர். எளிமையானவர் என்று தாம்பரம் பகுதியில் உள்ள ரயில்வே ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள்.
இது குறித்து பொய்யாமொழி கூறும்போது,
”எனக்குப் பொய்யாமொழி எனப் பெயர் வைத்ததே தந்தை பெரியார் தான்.1980ம் ஆண்டு ரயில்வே கூலியாக வேலையைத் தொடங்கினேன். 1992ல் சூப்பர்வைசராகப் பணி உயர்வு பெற்றேன். தற்போது மாதம் 10000 முதல் 15000 வரை சம்பாதிப்பேன். நேர்மையாக நடக்க வேண்டும். யாரையும் ஏமாற்றக் கூடாது என்ற கொள்கைளில் உறுதியாக இருக்கிறேன்.
இதுபோல் பயணிகள் தவறவிட்ட பொருள்களைப் பலமுறை ரயில்வேயிடம் ஒப்படைத்திருக்கிறேன். ஆனால் தற்போதுதான் ரயில்வே நிர்வாகம் எனக்குப் பரிசலித்திருக்கிறது.அடுத்தவரின் பொருள்களுக்கு ஆசைப்பட்டதில்லை. இந்தப் பணத்தை தொலைத்தவர் என்னைச் சந்தித்து, எனக்குப் பணம் கொடுத்தார். ஆனால் நான் அதை வாங்க மறுத்துவிட்டேன். என்னுடைய உழைப்பில் கிடைத்த பணத்தில் மட்டும்தான் வாழ்வேன். அவரின் அன்பிற்காக அவர் வாங்கிக் கொடுத்த ஒரு டீயை மட்டும் சாப்பிட்டேன்” என் கூறியுள்ளார்.