• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆங்கில புத்தாண்டு – தலைவர்கள் வாழ்த்து

December 31, 2016 தண்டோரா குழு

2016ம் ஆண்டு நிறைவடைந்து 2017ம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை பிறக்கிறது. இதையொட்டி புத்தாண்டு விழா சனிக் கிழமை இரவே கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு, தமிழக ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.

சி.எச். வித்யாசாகர் ராவ் (தமிழக ஆளுநர்):

புத்தாண்டின் தொடக்கத்தில் பழைய நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்று, வருங்காலத்திற்காக சிறப்பாகத் திட்டமிட்டு நாட்டை முன்மாதிரியாகக் கொண்டு செல்வோம். இந்த புதிய வருடத்தை திறந்த இதயத்தோடும், மனத்தோடும் ஏற்றுக்கொண்டு சுமுகமான இந்தியாவை உருவாக்கப் பாடுபடுவோம்.

ஓ. பன்னீர்செல்வம் (தமிழக முதல்வர்):

புத்தாண்டு மலர்கின்ற இந்த இனிய நாளில் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போடச் செய்ய வேண்டும் என்பதும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்க வேண்டும் என்பதும்தான் தனது அரசின் குறிக்கோள் என்று சூளுரைத்து, தமிழக மக்களின் நல்வாழ்விற்காக அயராது பாடுபட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவை நனவாக்கிட, அவர் வழியில் செயல்படுகிறது தமிழ்நாடு அரசு.

அவர் வகுத்த எண்ணற்ற திட்டங்களைச் சிறப்பான முறையில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

தமிழக மக்களின் விருப்பங்கள், தேவைகளைக் கருத்தில் கொண்டு, அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத் திட்டங்களை மக்கள் அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்தி, ஒற்றுமையுடன் அயராது உழைத்து, வளமும் வலிமையும் மிக்க தமிழ்நாட்டை உருவாக்கிட இந்தப் புத்தாண்டில் உறுதியேற்போம்.

இந்தப் புத்தாண்டு தமிழக மக்களுக்கு மங்காத எழுச்சியையும், நிறைவான வளர்ச்சியையும், நீங்காத வளங்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்)

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதுதான் இயற்கையின் நியதி. அந்த வகையில் 2016-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சோதனைகளை மறந்து சாதனைகளைப் படைக்கும் ஆண்டாக 2017-ஆம் ஆண்டு அமையும் என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்)

2016ம் ஆண்டு கடந்து, 2017 இல் உலகம் அடியெடுத்து வைக்கிறது. வேகமாக ஊடுருவி வருகின்ற மேல்நாட்டு கலாசாரத்தால் தமிழ்ப் பண்பாட்டுத் தளம் சிதைந்து வருகிற அவலம் மிகவும் கவலை தருகிறது. உலகின் மிகப் பழமையான தமிழர் நாகரிகத்தின் அடிப்படை அறநெறிகளைப் பாதுகாக்க இப்புத்தாண்டு நாளில் உறுதிகொள்வோம்.

தமிழிசை சவுந்தர்ராஜன் (தமிழக பாஜக தலைவர்)

அனைத்து துன்பங்களும் அகன்று, அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் ஆண்டாக இந்த ஆங்கிலப் புத்தாண்டு மலர வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
விஜயகாந்த் (தே.மு.தி.க. தலைவர்)

புதியதாய்ப் பிறக்கும் 2017 வருடப் புத்தாண்டை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்போம். சாதி, மதம், இனம், மொழி, வேறுபாடின்றி கொண்டாடி மகிழ்வோம். ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கஷ்டங்கள் நீங்கி, இருள் சூழ்ந்துள்ள அவர்களது வாழ்வில் கடவுள் அருளால் இன்றிலிருந்து ஒளிவெள்ளம் ஏற்படட்டும். எனது இதயபூர்வமான புத்தாண்டு தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி தலைவர்)

2016-ம் ஆண்டில் சோதனைகளையும், சாதனைகளாக்கி, 2017-ம் புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த புதிய வருடத்தில் அனைத்து தமிழர்களுக்கும் புத்தாண்டு பரிசாக ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் படிக்க