• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆடிப்பெருக்கைக் கொண்டாட மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு

July 25, 2016 தண்டோரா குழு

ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா காவிரிக் கரையோர மக்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஆடிப்பதினெட்டு என்பது பாரதப்போர் முடிந்து அதற்குப் பயன் படுத்தப்பட்ட தளவாடங்களை சுத்தம் செய்து மீண்டும் படைத்தளங்களில் ஒப்படைத்த நாள்.

அதன் நினைவாக தற்போது வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் அரிவாள், கத்தி போன்ற பொருட்களைச் சுத்தம் செய்தும், கோவில்களில் சுவாமியின் ஆயுதங்களை விடியற்காலையிலேயே காவிரி ஆற்றில் கழுவி சுத்தம் செய்துவிட்டு மீண்டும் சாமியிடம் ஒப்படைத்து பூஜை செய்வதும் வழக்கம். இந்த வழக்கம் காவிரிக் கரையோர மக்கள் தவறாமல் கடைப்பிடித்து வருவார்கள்.

அதுமட்டுமின்றி பாரதப் போரின் நிறைவு நாளை அனுசரிக்கும் விதமாக மக்கள் புனித நதிகளில் தலைமுழுகி கோவிலுக்குச் சென்று வருவதும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதே சமயம், ஆண்டுதோறும் ஆடிமாதம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது.

ஆனால் தற்போது காவிரியில் நீர் வரத்து என்பது அரிதான ஒன்றாக உள்ளது. எனவே அணையில் இருக்கும் நீரைத் திறந்துவிட்டு ஆடிப்பெருக்கு கொண்டாடுவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் வரும் மாதம் இரண்டாம் தேதி வரும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரிக்கரையோர மக்கள் கொண்டாடும் விதமாக மேட்டூர் அணையில் இருந்து நீரைத் திறந்துவிட தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.

இதையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு
ஐயாயிரம் கன அடி நீரைத் திறந்துவிட்டனர். இந்த நீர் திறப்பு வரும் 31ம் தேதிவரை நீடிக்கும் எனவும், ஆற்றங்கரையோர் மக்கள் பாதுகாப்பாக ஆடிப்பெருக்கைக் கொண்டாடுமாறும் மாவட்ட ஆட்சியர் கோரிக்கை விடுத்தார்.

அணை தற்போதைய நிலவரப்படி 56.75 அடி நீர்மட்டமும், 6,155 கன அடி நீர் வரத்தும் உள்ளது. இதிலிருந்து வினாடிக்கு 5,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க