October 14, 2017
தண்டோரா குழு
சிங்கப்பூரில் நடந்த விழா ஒன்றில் கங்கை நதியில் இருந்த கழிவுகளை சுத்தம் செய்து, அதில் வாழும் உயிரினகளின் வாழ்க்கை சுழலை மேம்படுத்தியதற்காக இந்திய பொறியியல் நிறுவனத்துக்கு ‘பி இன்ஸ்பையர்ட்’ விருது வழங்கப்பட்டது.
சிங்கப்பூரில் உள்ள ‘பி.ஐ.எம். அட்வான்ஸ்மென்ட்’ என்ற நிறுவனம் ஆண்டுதோறும் வடிவமைப்பு, கட்டுமான பணிகள் மற்றும் சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களை தேர்ந்தெடுத்து, ‘பி இன்ஸ்பையர்ட்’ என்ற விருதை வழங்கி வருகிறது.
அவ்வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரிலுள்ள என்.ஜே.எஸ். பொறியியல் நிறுவனம், ஜப்பான் சர்வதேச கோஆபரேஷன் நிறுவனத்தின் உதவியுடன், வாரணாசியில் உள்ள கங்கை ஆற்றிலுள்ள கழிவுகளை அகற்றும் பணியை செய்தது. அந்த பணியை செய்தற்காக, இவ்வாண்டிற்கான ‘பி இன்ஸ்பையர்ட்’ விருது நேற்று(அக்டோபர் 13) சிங்கப்பூரில் வழங்கப்பட்டது.
கங்கை நதி மற்றும் அதன் துணை நதியான வருண் நதி ஆகியவற்றில் உள்ள கழிவுகளை அகற்றவும், கங்கை நீரின் தரம் மற்றும் உயிரினங்களின் வாழ்க்கை சூழலை மேம்படுத்தும் பொறுப்பை அந்த நிறுவனம் ஏற்றுக்கொண்டு, அதற்கான பணிகளை திறம்பட செய்தது. இத்திட்டத்தை 2018ம் ஆண்டு ஜூலைமாதம் 31ம் தேதி முடிவடையும் என்று கருதப்படுகிறது.மேலும், இந்த திட்டத்திற்கான செலவு சுமார் 496.90 கோடி ஆகும்.
‘பி இன்ஸ்பையர்ட்’ விருதுக்கு, சுமார் 50க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 400க்கு அதிகமான நிறுவனங்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில், இந்தியாவின் என்.ஜே.எஸ். நிறுவனம் இந்த விருதுக்கு தேர்வு செய்யபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.