June 13, 2016
தண்டோரா குழு
ஜிம்பாப்வேவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை எளிதாக வென்றது.
இரு அணிகளும் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வென்று முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இன்று இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோதிய இரண்டாவது ஒரு நாள் போட்டி ஹராரே நகரில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி இந்திய அணியினரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 34.3 ஓவரில் 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணியின் ஷிபான்டா 53, சிபாபா 21 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் சாஹல் 3, பரிந்தர் ஸரன், குல்கர்ணி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 26.5
ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அம்பதிராயுடு 41, கரூண் நாயர் 39, ராகுல் 33 ரன்கள் எடுத்தனர். ஒருநாள் தொடரில் உள்ள 3 போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளில் வென்று ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.