May 25, 2016
தண்டோரா குழு
கழிவுப் பொருட்களையும், குப்பைகளையும் ஒழுங்கற்ற முறையில் அப்புறப்படுத்துவதால், இயற்கைச் சூழலும், மனித ஆரோக்கியமும், முக்கியமாகப் பறவை இனமும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.
கோயம்பத்தூர் வடவள்ளியில் வசிப்பவர் ராஜராஜன். தனது வீட்டருகில் அமைந்துள்ள குப்பைத் தொட்டியில் 4 மைனாக்களை சில காகங்கள் கொத்தித் துன்புறுத்துவதை கண்டார்.
மைனாக்கள் தங்களைக் காத்துக் கொள்ளப் பறந்து செல்லாமல் சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு விலங்கு மீட்புக் குழுவிற்குத் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் பசைத் தண்டில் சிக்கிக் கொண்டிருந்த மைனாக்களைச் சமையல் எண்ணெய்யை உபயோகித்து மீட்டுள்ளனர்.
இது போன்ற கொறிக்கும் பறவைகளிடமிருந்து தானியங்களைக் காப்பாற்ற பசைத் தண்டுகளை மக்கள் உபயோகிப்பது வழக்கம். அந்தப் பசை தண்டுகளை அப்படியே குப்பைத் தொட்டியில் போடும் போது அவற்றில் பறவையின் கால்கள் ஒட்டிக் கொண்டு விடுகின்றன. பறக்க முடியாமல் சில சமயம் அவை இறக்கவும் நேர்கிறது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் கத்தி. ப்ளேடு, நூல் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை குப்பைத் தொட்டியில் எறிகிறோம். குப்பைத் தொட்டியில் கிடக்கும் மீதமான உணவுப் பண்டங்களைத் உண்ணும் பொருட்டு பறவைகள் முற்படும் போது, அந்தக் கூர்மையான பொருட்கள் அவற்றின் சிறகுகளையோ அல்லது கால்களையோ பதம் பார்த்து விடுகின்றன.
நமக்குத் தேவையல்லாத மக்கிப் போன பொருட்களை உட்கொண்டு சுற்றுச் சூழலை தூய்மையாக வைக்கும் தோட்டிப் பறவைகளான, காகம், மைனா, பருந்து போன்றவை இந்தச் சங்கடத்தில் மாட்டிக் கொள்கின்றன. சில சமயம் கழுத்தில் நூல் சுற்றிக் கொள்வதனால் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது.
பசைத் தண்டு போன்ற பொருட்களின் உறையில், உபயோகித்த பின் அதை அப்புறப்படுத்தும் வழி முறைகளையும் பூச்சிக் கட்டுப்பாடு மையம் அச்சடித்து விநியோகிக்க வேண்டும் என்று வனத்துறை காவலர் ஆர்.ராஜமோகன் வலியுறுத்தியுள்ளார்.
ரேசர், பிளேடு, நூல், பசைத் தண்டு போன்றவற்றை காகிதப் பைகளிலோ, துணிப் பைகளிலோ, அல்லது கனமான உறைகளிலோ நன்கு மடித்து பின்பே குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
விலங்கு காப்பு அதிகாரி ஜோசப், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் கூட்டங்கள் கூட்டி இத்தகைய விஷயங்கள் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.