September 1, 2018
தண்டோரா குழு
மறைந்த ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் மகன் ஹரிகிருஷ்ணாவின் சடலத்துடன் மருத்துவமனை ஊழியர்கள் செல்பி எடுத்துக் கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி ராமாராவின் மகனும்,நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி உயிரிழந்தார்.தெலங்கானா நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள நர்கெட்பள்ளி- அட்டன்கி நெடுஞ்சாலையில் சென்றபோது,ஹரிகிருஷ்ணாவின் கார் கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹரிகிருஷ்ணா,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் உயிரிழந்த நடிகர் ஹரிகிருஷ்ணாவின் சடலத்துடன் மருத்துவமனை ஊழியர்கள் 4 பேர் செல்ஃபி எடுத்துள்ளனர்.இந்த போட்டோவை சமூக வலைதளங்களிலும் அவர்கள் பகிர்ந்துள்ளனர்.இதற்கு கண்டனங்களும்,எதிர்ப்புக்களும் குவிந்து வருவதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் 4 பேரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் அவர்களின் இந்த செயலுக்காக மருத்துமனை நிர்வாகம் மன்னிப்பு கோரி உள்ளது.