July 30, 2016
தண்டோரா குழு
ஜெயலலிதாவிடம் கை குலுக்குவது என்பதே அபூர்வமாக நடக்கும் விஷயம் எனும் நிலையில், ஜெயலலிதாவின் நெற்றியிலேயே ஒருவர் பொட்டு வைத்திருக்கிறார் என்றால், அது ஆச்சர்யமான செய்திதானே.
அவர், ஆளுநர் ரோசய்யாவின் மருமகள். அதாவது ரோசய்யாவின் மகன் ஶ்ரீமன் நாராயண மூர்த்தியின் மனைவி.
ரோசய்யாவின் பேரனும் ஶ்ரீமன் நாராயணமூர்த்தியின் மகனுமான அனிருத்தின் திருமணம், ஹைதராபாத்தில் வரும் ஆகஸ்ட் 14 ம் தேதி நடைபெறுகிறது.
இதற்கு அழைப்பிதழ் தர ஶ்ரீமன் நாராயண மூர்த்தியும், அவருடைய மனைவியும் ஜெயலலிதாவைக் கோட்டையில் சந்தித்தனர். அப்போது பத்திரிகை கொடுத்து முடித்தபின் ரோசய்யா குடும்பப் பழக்கமான பொட்டு வைக்கும் பழக்கத்தில் அவர் பொட்டை எடுத்துள்ளார்.
அதற்கு முதல்வர் மறுப்பு தெரிவிப்பார் என்று நினைத்த நிலையில் சிரித்த முகத்துடன் அந்தப் பொட்டை நெற்றியில் வாங்கிக்கொண்டார் முதல்வர். இதைப் பார்த்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
அரசு அதிகாரிகள் முதல் மற்ற மாநில பெண் முதல்வர்கள் கூட எட்டி நின்றே பேசும் நிலையில் ஒருவர் முதல்வரின் நெற்றியில் பொட்டு வைத்தது மிகப்பெரிய செய்தியாக வலைத்தளங்களில் பரவி வருகிறது.