• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலகெங்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்..

January 21, 2017 தண்டோரா குழு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டக் களம் கடல் கடந்தும் விரிவடைந்துள்ளது. உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றன.

லண்டன்:

பிரிட்டன் தலைநகர் லண்டனில் இந்திய தூதரக அலுவலகம் முன் திரண்ட இங்கிலாந்து வாழ் தமிழர்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாதைகளைக் கைகளில் ஏந்திய அவர்கள், “இந்த விவகாரத்தில் இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களின் பாரம்பரியம் அழிவதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது” என்றனர்.

இலங்கை:

இலங்கை யாழ்ப்பாணத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த பகுதியில் உள்ள நல்லூர் ஆலயத்திற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்கள், தங்கள் கைகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாகைகளை ஏந்தியபடி கலந்து கொண்டனர்.

பிரான்ஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பாரிஸ் ஐஃபில் கோபுரம் முன் கூடிய பாரிஸ் வாழ் தமிழர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
“தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் ஜல்லிக்கட்டை நடத்தத் தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசும், தமிழக அரசும் எடுக்க வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தினர்.

தைவான் :

தைவான் நாட்டின் தலைநகர் தைபே நகரில் உள்ள தேசியப் பல்கலைக்கழகத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாகப் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தைவான் தமிழ்ச் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்தப் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், “ஜல்லிக்கட்டை நடத்த இந்திய மற்றும் தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்தப் ஆர்ப்பாட்டத்தில் தமிழர்கள் மட்டுமல்லாது தைவானில் வசிக்கும் பிற இந்தியர்களும் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டிற்காகப் போராடி வரும் தமிழக இளைஞர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

மலேசியா:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மலேசிய தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ்ப் பண்பாட்டைக் காக்க வேண்டும் என அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.

மலேசியாவின் பத்துமலையில் உள்ள பிரபலமான 140 அடி உயர முருகன் சிலைக்கு முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஸ்காட்லாந்து:

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்து ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரில் அமைதிப் போராட்டம் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்து, ஸ்காட்லாந்தில் வாழும் தமிழர்கள் அங்குள்ள எடின்பரோ நகரில் மவுனப் போராட்டத்தை நடத்தினர். ஜல்லிக்கட்டிற்கு ஆதரவான பதாகைகளைக் கையில் ஏந்தியபடி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது போன்று பல நாடுகளில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றன.

மேலும் படிக்க