December 26, 2016
தண்டோரா குழு
ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையால் அரசின் வரி வருவாய் அதிகரித்து கிராமப்புற முன்னேற்றத்துக்கும், தொழில் துறை வளர்ச்சிக்கும் அதிக நிதி ஒதுக்கி நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று அருண் ஜேட்லி பேசியதாவது: இந்த நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை 3.99 சதவீதமாகக் குறைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
இதன் காரணமாக ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனை அதிகரிப்பதால், நிதி விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை மேம்படுவதோடு அரசின் வரி வருவாயும் அதிகரிக்கும். இதனால் நிதிப் பற்றாக்குறையும் குறையும். கிராமப்புற முன்னேற்றத்துக்கும், தொழில் துறை வளர்ச்சிக்கும் அதிக நிதி ஒதுக்கி நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும்.
குறு,சிறு தொழில்களுக்கு வங்கிகள் அதிக கடன் வழங்க வாய்ப்பு ஏற்படும் என்பதால் நமது பொருளாதாரம் வளர்ச்சி பாதையை எட்டும்.
இவ்வாறு அருண் ஜேட்லி பேசினார்.