June 14, 2016
தண்டோரா குழு
பொதுவுடைமை சொத்துகளை அழிப்பதும்,தீயிடுவதும் ,மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதும் எதிர்ப்பைக் காட்ட நம்மோர் தேர்ந்தெடுக்கும் வழி.ஆனால் இந்த 14 வயதுச் சிறுவன் மக்களது கோரிக்கையை அரசுக்கு உணர்த்தத் தேர்ந்தெடுத்த வழி அட்டூழியும் செய்வோரை வெட்கச் செய்யும்.
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது பெரும்பாலம் கிராமம்.இது நான்கு புறமும் நீர் சூழ்ந்த தீவு. இந்தக் கிராமத்தின் ஜனத்தொகை 10000 த்திற்கும் மேல்.இந்தக் கிராமத்திலிருந்து முக்கிய சாலைக்குச் செல்ல வேண்டுமென்றால் அங்குள்ள ஏரியில் படகின் மூலம் 1.5 மணி நேரம் பயணம் செய்யவேண்டும்.
பாம்புகள் மிகுந்த இந்தக் கிராமத்தில் பாம்பு கடித்தால் மருத்துவரை அணுகுவதற்குள் கடிபட்டவர் இறந்து விடுவர்.அவசரச் சிகிச்சை என்பது இவர்களுக்குக் கிட்டாதஒன்று.
கடந்த வருடம் மட்டும் 50 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று கிராம வாசி அபிலாஷ் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் மக்கள் கடந்த 25 வருடங்களாக 700 மீட்டர் நீளத்திற்கு ஒரு பாலம் அமைத்துத் தருமாறு போராடி வருகின்றனர். இதுவரை எந்தப் பயனும் இல்லை.
மக்களின் பிரதிநிதியாக அர்ஜுன் சன்தோஷ் என்ற இச் சிறுவன் எதிர்ப்பைத் தெரிவிக்கத் தன்னை வருத்தி தினமும் 3 கிலோ மீட்டர் நீச்சலடித்துப் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினான்.இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. மொத்தம் இந்த ஏரியில் 6 படகுகளே உள்ளன.
அவையும் மிகுந்த மோசமான நிலையில் உள்ளவை. பள்ளி நேரத்தில் ஏற்றிச் செல்ல படகுகள் குறைவு, ஆனால் ஆட்கள் அதிகம். அதிக பாரமானால் படகுகள் கவிழவும் வாய்ப்புக்கள் உண்டு. காத்திருந்து செல்வதற்குள் பள்ளி நேரம் தவறி விடுவதனால் ஆசிரியரின் தண்டனைக்கு உள்ளாக நேரிடுகிறது என்பதும் உண்மை.
அர்ஜுன் சதோஷ் ன் இந்தப் போராட்டம் 10 நாட்கள் கடந்த நிலையில் தான் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது.அதிகாரிகள் போராட்டத்தை கைவிடுமாறு அறிக்கை அனுப்பினரேயன்றி கோரிக்கையை நிறைவேற்றுவதைப் பற்றி உறுதியாக எதுவும் கூறவில்லை.
சிறுவன் இளைய பருவத்தினன் என்பதாலும்,இந்த குளிர் காலத்தில் தினசரி நீந்துவதால் சங்கடங்கள் ஏதேனும் ஏற்பட்டால் சிறுவனைத் தடுக்காத காரணம் காட்டி அதிகாரிகள் சிக்கலுக்கு உள்ளாவார்கள் என்ற காரணத்தினாலும் தான் அறிக்கைஅனுப்பப்பட்டது என்று கலெக்டர்.கிரிஜா கூறியுள்ளார்.
அர்ஜுனன் தற்பொழுது தன் போராட்டத்தை நிறுத்தியுள்ளான்.சர்கார் உரிய நடவடிக்கை விரைவில் எடுக்காவிட்டால் தான் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கப் போவதாகத் தெரிவித்துள்ளான்.