November 13, 2017
தண்டோரா குழு
திருச்சி அருகே போலீசாரை கண்டித்து கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த த.முருங்கப்பட்டியில் இயங்கிவந்த தனியார் வெடிமருந்து ஆலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கிராம மக்கள் ஆலையை மூடக்கோரி பலகட்ட போராட்டங்கள் நடத்தினர்.
பின்னர் அந்த வெடிமருந்து ஆலை மூடப்பட்டு அதன் உரிமையாளர் மற்றும் மேலாளர் கைது செய்யப்பட்டனர். மேலும் விபத்தில் பலியானவர்களுக்கு அரசு நிதி உதவியை வழங்கியது. இந்நிலையில் கடந்த வாரம் மீண்டும் ஆலைக்குள் கட்டுமான பணிகளை மேற்கொள்ள கட்டுமான பொருட்களை ஏற்றி சென்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து போராட்டம் நடத்தியதாக கூறி 7 பேரை உப்பலியபுரம் போலீசார் கைது செய்தனர்.
இதைதொடர்ந்து போலீசாரை கண்டித்து இன்று முருங்கப்பட்டியில் கிராமத்தில் கடைகள் மற்றும் விடுகளில் கருப்புக்கொடி கட்டி கிராம மக்கள் பேராட்டம் நடத்தி வருகின்றனர்.மேலும் திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கைது செய்யபட்ட 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என மனு அளித்தனர்.இப்போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.