July 28, 2020
தண்டோரா குழு
தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இதுவே நல்ல தருணம் எனவும்,விரைவில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ஏழாயிரத்தை தாண்ட வாய்ப்புள்ளதாக கோவையை சேர்ந்த தங்க நகை விற்பனையாளர் தெரிவித்துள்ளார்.
தங்கம் விலை இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணத்தில் பொருளாதாரம் முடங்கி வரும் நிலையில் தங்கத்தில் முதலீடு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதத்தில் இருந்து தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
சர்வதேச சந்தை நிலவரம் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் தற்போது வரை சவரனுக்கு 1,304 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கோவையை சேர்ந்த தங்க நகை வியாபாரியான ரகுநாதன் சுப்பையா இன்னும் ஒரு சில மாதங்களில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ஏழாயிரத்தை தாண்ட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும் தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இதுவே நல்ல சந்தர்ப்பம் எனவும், ஏனென்றால் இனி தங்கம் விலை அதிக உயர வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.