August 1, 2020
தண்டோரா குழு
கோவை செங்காளிபாளையம் பகுதியில் 8 அடி நீளமுள்ள பாம்பை சர்வ சாதரணமாக கையில் பிடித்து தரதரவென இழுத்து வந்த நபரை அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்தனர். பாம்பை பிடித்து வரும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.
கோவை துடியலூரை அடுத்த செங்காளிபாளையம் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் ஒருவீட்டின் அருகே பெரிய பாம்பு ஒன்று இருப்பதாக தகவல் பரவியது.
இதை கேள்விப்பட்டு அங்கு அப்பகுதி மக்கள் அங்கு குவிந்துவிட்டனர். அதற்குள் அந்த பாம்பு அருகில் இருட்டாக இருந்த ஒரு புதருக்குள் சென்றுவிட்டது.அப்போது கூட்டத்தில் இருந்த குமார் என்பவர் கையில் ஒரு டார்ச் லைட்டுடன் அந்த புதருக்குள் சென்றார். சிறுது நேரம் கழித்து வெளியே வந்த அவர் கையில் சுமார் 8 அடி நீளமுள்ள பாம்பு இருந்ததைப் பார்த்து அங்கிருந்தவர்கள் ஆச்சரியமடைந்து கூச்சலிட்டனர்.
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என பழமொழி உள்ள நிலையில் பாம்பை சர்வசாதரணமாக கையில் பிடித்து தரதரவென இழுத்து வந்த குமாரோ ஏதோ கையில் புடங்காயை பிடித்திருப்பது போல பிடித்திருந்தார். இதனை அங்கிருந்தவர்கள் தங்கள் மொபைல் போன்களில் வீடியே எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.