May 6, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் உள்ள மதுக்கடை ஒன்றில் மாவிலை, வாழை மரம் கட்டி பூஜை நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி முதல் மதுபானம் விற்பனை செய்யும் டாஸ்மாக் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசின் அறிவிப்பிற்கு அரசியல் கட்சித் தலைவர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
எனினும், டாஸ்மாக் கடைகளில் உரிய பாதுகாப்பு,சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனத்திற்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.அதைப்போல்
ஒவ்வொரு கடைக்கும் தலா 2 காவலர்கள், 2 ஊர்க்காவல் படையினர்,1 தன்னார்வலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.ஒவ்வொருவருக்கும் இடையே 6 அடி இடைவெளியை உறுதி செய்ய வேண்டும். அதிக கூட்டம் கூடும் மதுக்கடைகளில் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் கண்காணிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,மது வாங்குவதற்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை 50 வயதுக்கு மேலானவர்களுக்கும், பகல் 1 மணி முதல் 3 மணி வரை 40 முதல் 50 வயதானவர்களுக்கும், 3 மணி முதல் 5 மணி வரை 40 வயதுக்கு கீழானவர்களுக்கும் மது விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 நாட்களுக்கு மேல் மதுக்கடைகள் மூடப்பட்டு நாளை திறக்க உள்ள நிலையில் டாஸ்மாக் பணியார்கள் கடைகளை சுத்தம் செய்து வருகின்றனர்.இந்த நிலையில்,கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் உள்ள 1773 எண் மதுக்கடையில் வாழை மரம், மாவிலை தோரணம் கட்டப்பட்டுள்ளது.மேலும், பூஜைகள் செய்யப்பட்டு மது விற்பனைக்கு ஊழியர்கள் தயாராகின்றனர்.