May 26, 2016
தண்டோரா குழு.
கர்நாடகாவில் ஹசான் நகரத்தில் 19 வயது நந்தினி என்ற பெண்மணி 6.8 கிலோ எடையுள்ள பெண் குழந்தையை ஈன்றெடுத்துள்ளார்.
தாயின் எடை 94 கிலோ. அவரது உயரம் 5 அடி 9 அங்குலம். பொதுவாகக் குழந்தையின் எடை 3.4 கிலோ இருக்கும். ஆனால் இக்குழந்தையின் எடையோ இருமடங்கு.
குழந்தையின் தாயாருக்கு சர்க்கரை நோயும், தைராய்டும் உள்ளது. பிறந்த குழந்தை எந்த நோயின் அறிகுறியுமின்றி ஆரோக்கியமாகவே உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தனது 25 வருடச் சேவையில் இவ்வளவு மிகுந்த எடையுடன் பிறந்த குழந்தையைப் பார்த்ததில்லை, இது 6 மாத குழந்தையின் எடையாகும் மேலும் இது இந்தியாவில் மட்டுமல்ல உலகத்திலேயே எடை மிகுந்த குழந்தையாகும் என்று டாக்டர் வெங்கடேஷ் ராஜு கருத்துத் தெரிவித்துள்ளார்.
எந்த அபாயமோ, சிக்கலோ இன்றி பிரசவ அறுவை சிகிச்சை அரை மணிநேரம் நடந்தது, குழந்தை பெரிதாகவும் அழகாகவும் உள்ளது என்று மருத்துவர் பூர்ணிமா மானு தெரிவித்தார்.
இப்பொழுது கின்னஸ் புத்தகத்தில் முதல் இடத்தில் இருக்கும் ஆண் குழந்தையின் எடை 10.3 கிலோ. தாயின் பெயர். கார்மீலீனா ஃவெடிலீ இவர் இத்தாலிய நாட்டைச் சேர்ந்தவர்.
இதோ இன்னும் சில எடைமிகுந்த குழந்தைகளின் குறிப்புக்கள்.
அன்னா ஹெயினிங்க் பேட்ஸ், அவர் 1879ம் ஆண்டு பெற்ற ஆண் குழந்தையின் எடை 9.98 கிலோ. அவரும் பிறக்கும் போது 9.98 கிலோ இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இவரது ஆண் குழந்தை பிறந்த 11 மணி நேரத்தில் இறந்து விட்டது.
அடுத்ததாகப் பிரிட்டிஷ் பெண்மணி மாக்ஸிமி மாரின் 2013ம் ஆண்டு மரியா லோரினா என்ற 6.2. கிலோ எடையுள்ள சிசுவைப் பெற்றெடுத்தார்.
பின்னர் 2014ம் ஆண்டு போஸ்டன் மாசாசுசெட்ஸ்ல் 6.5 கிலோ எடையுள்ள குழந்தை பிறந்தது. அதன் பெயர் காரிசா ரூசாக்.
இவை மட்டுமல்லாது கடந்த வருடம் நவம்பர் மாதம் இந்தியாவில் ஃவர்டுவஸ் காட்டுன் என்ற பெண்மணி 6.6 கிலோ எடையுள்ள ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார்.