September 8, 2025
தண்டோரா குழு
பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான ஈஷா கிராமோத்சவத்தின் இரண்டாம் கட்டப் போட்டிகள் 6 மாநிலங்களில் கோலாகலமாக நேற்று (07/09/2025) நடைபெற்றது.
பெங்களூரு ஈஷா மையத்தில் சத்குரு முன்னிலையில் நடைபெற்ற போட்டியில் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா மற்றும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கினர்.
விளையாட்டுகளில் ஈடுபடுவதன் மூலம், வாழ்க்கையில் முழுமையான ஈடுபாடு, அடையாளங்களை கடந்து செல்லும் தன்மை மற்றும் தோல்விகளையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் ஆகிய பலன்களை மக்கள் பெற முடியும். இதன் அடிப்படையில் கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக விளையாட்டை கொண்டு வரும் நோக்கில், ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுத் திருவிழா சத்குருவால் துவங்கப்பட்டது.
நடப்பாண்டில் 17-ஆவது ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு,ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகிய பகுதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றன. இதில் 35,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 60,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர். இதில் ஆண்களுக்கான வாலிபால் மற்றும் பெண்களுக்கான த்ரோபால் போட்டிகள் நடத்தப்பட்டன.
தமிழ்நாடு,கர்நாடகா,தெலுங்கானா, ஆந்திரா, கேரளா மற்றும் ஓடிசா ஆகிய ஆறு மாநிலங்களிலும், முதற்கட்ட கிளஸ்டர் அளவிலான போட்டிகள் நிறைவடைந்து நேற்று இரண்டாம் கட்டப் போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் கோவை, சேலம், வேலூர், தஞ்சாவூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய 6 இடங்களில் இப்போட்டிகள் நடைபெற்றன.
இவ்விடங்களில் விளையாட்டு போட்டிகளுடன் கிராமிய கலை நிகழ்ச்சிகளும், வேடிக்கை விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன.
தஞ்சாவூரில் நடைபெற்ற போட்டிகளை தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம், மேயர் சன் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.திருநெல்வேலியில் சிறைத்துறை எஸ்பி செந்தாமரை கண்ணன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
ஆறு மாநிலங்களிலும் இருந்து இரண்டாம் கட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி செப்டம்பர் 21-ஆம் தேதி, கோவை ஈஷாவில் உள்ள புகழ்பெற்ற ஆதியோகி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கானதாக இல்லாமல், மீனவர்கள், விவசாயிகள், தினக்கூலி தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் உள்ளிட்ட எளிய கிராமப்புற மக்கள் பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.