May 2, 2020
தண்டோரா குழு
இந்தியா வல்லரசாக மக்களின் பங்களிப்பு குறித்து 50 ஆயிரம் மக்களின் கருத்துகளை ஒலிபரப்பிய ரேடியோ ஹப் மாணவர்களின் முயற்சியோடு பி எஸ் ஜி சமுதாய வானொலி ஒலிபரப்பியது.
பி எஸ் ஜி சமுதாய வானொலி 107.8 பண்பலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் மக்களுக்கான மருத்துவம், உளவியல் ஆலோசனைகள், வேலை வாய்ப்புகள், இலவச கல்வி, ரத்ததானம், காச நோய் மற்றும் ஹெச் ஐ வியால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை விளம்பரம், இல்லாமல் சேவை மனப்பான்மையோடு வழங்கி வருகிறது. இச்சமுதாய வானொலியில், மாணவர்களும் இணைந்து, மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு உதவ ரேடியோ ஹப் என்னும் அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாம் அவர்களின் கனவை நனவாக்கும் வகையில், 2030ல் ‘இந்தியா வல்லரசாக நமது பங்களிப்பு ‘ என்னும் தலைப்பில் பொதுமக்கள் 50 ஆயிரம் பேர்களின் கருத்துகள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஒலிபரப்பபட்டுள்ளன.
இந்த கருத்து கேட்பு ஒலிப்பதிவு 2020 ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் 20 ஆம் தேதி வரை எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி நிறைவு நாள் கொரொனா எதிரொலி காரணமாக தள்ளி வைக்கப்பட்ட நிலையில் , நேற்று காலை 6 மணி முதல் மாலை ஆறு மணி வரை நேரலை நிகழ்ச்சியில் ரேடியோ ஹப் மாணவர்கள் 150 பேர், வீடிட்லிருந்தபடியே சமூக வலைதளம் மூலம் பங்கு பெற்றனர். 12 மணி நேர நேரடி நிகழ்ச்சியில் 42 நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். இந்த நிகழ்ச்சிகள் முழுவதும் கொரொனா குறித்த விழிப்புணர்வும், உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு கொடுப்பவர்களின், ரத்த தானம் குறித்த நிகழ்ச்சிகள் ஒலிபரப்பபட்டுள்ளன. மாணவர்களின் கூட்டு முயற்சியில் 50 ஆயிரம் பேர்களின் ஒலிப்பதிவுகள் சாத்தியமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது..