• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

5 இளம் படைப்பாளிகளுக்கு விஷ்ணுபுரம்-ரமேஷ் பிரேதன் நினைவு விருது

December 22, 2025 தண்டோரா குழு

கோவையில் டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்ற விழாவில் தமிழில் எழுதி வரும் 5 இளம் படைப்பாளிகளுக்கு விஷ்ணுபுரம்-ரமேஷ் பிரேதன் நினைவு விருது வழங்கப்பட்டது.

கோயம்புத்தூரை மையமாகக் கொண்டு செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பு சார்பில், தமிழின் முதன்மையான இலக்கிய ஆளுமைகளை கவுரவிக்கும் வகையில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’ வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் கலைநயமிக்க விருதுச் சிற்பம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

ஏற்கெனவே இந்த விருது எழுத்தாளர்கள் ஆ.மாதவன், பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப், ஞானக்கூத்தன், தேவதச்சன், வண்ணதாசன், சீ.முத்துசாமி, ராஜ் கௌதமன், அபி, சுரேஷ்குமார இந்திரஜித், விக்ரமாதித்யன், சாரு நிவேதிதா, யுவன் சந்திரசேகர், இரா.முருகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த புதுச்சேரி எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் உடல்நலக் குறைவால் சமீபத்தில் காலமானார். கவிஞர், புனைவெழுத்தாளர் மற்றும் இலக்கியச் சிந்தனையாளர் என்ற பன்முகங்களைக் கொண்ட ரமேஷ் பிரேதனின் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பாகும். எனவே, நடப்பாண்டு விஷ்ணுபுரம் விருது ரமேஷ் பிரேதனின் விருப்பப்படியே அவரது நினைவுடன் சிறுகதை, கவிதை, நாவல், நாட்டாரியல் ஆய்வு, நாட்டுப்புறக் கலை, மொழிபெயர்ப்பு, செவ்வியல் கலை என பல்வேறு தளங்களிலும் இயங்கி வரும் இளம் படைப்பாளிகளான தேவி லிங்கம், சஜு, செல்வகுமார் பேச்சிமுத்து, அசோக் ராம்ராஜ், அழகிய மணவாளன் ஆகிய 5 இளம் படைப்பாளிகளுக்கு வழங்கப்பட்டது. இவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கம், கலைநயமிக்க விருதுச் சிற்பம் ஆகியவை வழங்கப்பட்டன.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ராஜஸ்தானி சங்க அரங்கில்டிசம்பர் 21-ம் தேதி மாலை நடைபெற்ற விழாவில் விஷ்ணுபுரம்-ரமேஷ் பிரேதன் நினைவு இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக ரமேஷ் பிரேதன் குறித்து எழுத்தாளர் அகரமுதல்வன் இயக்கியுள்ள ‘அம்மை அப்பன் அயோனிகன்’ எனும் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

இந்த விருது விழாவில் தெலுங்கு எழுத்தாளர் மதுராந்தகம் நரேந்திரா, கன்னட எழுத்தாளர் கவிஞர் ஜெயந்த் காய்கினி, எழுத்தாளர் ஆஸ்டின் செளந்தர், எழுத்தாளர் அகரமுதல்வன் ஆகியோருடன் எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

விழாவின் முதல் நாள் (டிச. 20) முதல் காலை இலக்கிய விவாதங்கள், கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பல்வேறு படைப்பாளிகள், எழுத்தாளர்கள், இலக்கியச் செயல்பாட்டாளார்கள், மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாசகர்களிடம் உரையாடினர். மாலையில் மெய்க்களம் அமைப்பினர் ஜெயமோகனின் இரண்டு நாடகங்களை நிகழ்த்தினர். அரங்கில் சிறு புத்தக் காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது.

இந்தியாவின் முதன்மையான இலக்கிய நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்கது விஷ்ணுபுரம் இலக்கிய விருது. ஏனெனில், தீவிரமான இலக்கிய ஆர்வமிக்க வாசகர்களாலேயே இவ்விழா ஒருங்கிணைக்கப்படுகிறது. நவீனத் தமிழ் இலக்கியத்துக்கு செழுமை சேர்த்த முன்னோடிப் படைப்பாளுமைகளைக் கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விஷ்ணுபுரம் இலக்கிய விருது, நடப்பாண்டில் எழுத்தாளர் ரமேஷ் பிரேதனின் நினைவைப் போற்றும் வகையில் ஐந்து இளம் படைப்பாளிகளுக்கு வழங்கப்பட்டது பெருமைக்குரியது என்று விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க