• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

2446 வளர்ச்சி பணிகளில் 595 பணிகள் முடிவுற்றுள்ளன – கோவை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு தலைவர் தகவல்

March 8, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் இக்குழுவின் தலைவரும், கோவை எம்பி-யுமான பி.ஆர். நடராஜன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கோவை எம்.பி. பி.ஆர். நடராஜன் தெரிவித்ததாவது:

கோவை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் ஒன்றிய, மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள், பையோ மைனிங், பந்தய சாலையில் மாதிரி சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 2021-22 ஆம் ஆண்டில், ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம், அங்கன்வாடி மையம், உணவு தானிய கிடங்கு, சிமெண்ட் கான்கிரீட் சாலை உள்ளிட்ட 2446 பணிகளில் 595 பணிகள் முடிவுற்று உள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளுர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2021-2022 மற்றும் 2022-2023 ஆண்டில் கோவை மாநகராட்சி, சூலுார், சுல்தான்பேட்டை, பெரியநாயக்கன்பாளையம், அன்னூர் ஆகிய வட்டாரங்கள், கூடலூர் நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.7.09 கோடி மதிப்பீட்டில் 47 பணிகள் எடுக்கப்பட்டு அதில் 14 பணிகள் முடிவுற்று உள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு மாநில நகர்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் 2021-22 ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.864 கோடி நிதியிணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.864 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2022-23 ஆண்டிற்கு ரூ.750 கோடி நிதியிணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.750 கோடி வழங்கப்பட்டுள்ளது. முழு இலக்கு எய்தப்பட்டது பாராட்டுகுரியதாகும். மேலும் வரும் நிதி ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக நிதியிணைப்புகள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தீன்தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டு 512 இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் அன்னூர், ஆனைமலை, பொள்ளாச்சி மற்றும் நெகமம் ஆகிய இடங்களில் உள்ள 4 ஒழுங்குறை விற்பனைக் கூடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசால் விலை ஆதாரத் திட்டத்தின் கீழ் காரமடை, செஞ்சேரி, நெகமம், பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, அன்னூர், தொண்டாமுத்தூர் மற்றும் சூலூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 2023 ஆண்டிற்கு அரவை கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.108.60க்கும், பந்து கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.117.50 என்ற விலையில் மொத்தம் 22000 மெ.டன் கொப்பரை கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை கொள்முதல் நடைபெற உள்ளது. பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடுதிட்டத்தின் கீழ் 2022-2023 நிதிஆண்டில் ரூ.19.11 கோடி மதிப்பில், 557 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

மேலும் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டு வரும் பாலங்கள், சாலை மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும். அனைத்து துறைகளிலும் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை உரிய திட்டமதிப்பீட்டின் அடிப்படையில் முறையாக செயல்படுத்தி பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி, எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி வி.ஜெயராமன் (பொள்ளாச்சி), ஏ.கே.செல்வராஜ் (மேட்டுப்பாளையம்), அம்மன் கே.அர்ச்சுணன் (கோவை வடக்கு), பி.ஆர்.ஜி.அருண்குமார் (கவுண்டம்பாளையம்), செ.தாமோதரன் (கிணத்துக்கடவு), வி.பி.கந்தசாமி (சூலூர்), கே.ஆர்.ஜெயராமன் (சிங்காநல்லூர்), அமுல் கந்தசாமி (வால்பாறை), வானதி சீனிவாசன் (கோவை தெற்கு), மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) டாக்டர்.அலர்மேல் மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் லீலாஅலெக்ஸ், துணை மேயர் வெற்றி செல்வன், மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க