• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

10 % இடஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

January 21, 2019 தண்டோரா குழு

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்துக்கு எதிரான திமுக தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக அடிப்படையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கும், இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதைப்போல் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.பின்னர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து இது சட்டமானது.

இதற்கிடையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில்,

இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல, பொதுப்பிரிவினருக்கு பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது இயற்கை நீதிக்கும் அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது. இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டால், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கும், இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது பாதிக்கப்படும்.

தமிழகத்தில் ஏற்கெனவே 69 சதவீத இடஒதுக்கீடு உள்ள நிலையில், மேலும் 10 சதவீதம் என்பது இடஒதுக்கீட்டின் அளவை 79 சதவீதம் ஆக மாற்றிவிடும். எனவே, இந்த புதிய, பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து, அதற்கான சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் , “எந்த ஆய்வும் இல்லாமல் இந்த இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று வாதிடப்பட்டது. அதைப்போல் மத்திய அரசு சார்பில், இடஒதுக்கீடு சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர திமுகவுக்கு முகாந்திரம் இல்லை. நாடாளுமன்றத்தில் சட்டத்தை தடுக்க முடியாததால் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். இதனை பொதுநல வழக்காக கருத முடியாது என்று வாதிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் இது தொடர்பாக மத்திய அரசு, இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க