May 30, 2020
தண்டோரா குழு
கொரோனா ஊரடங்கால் தொழிற்சாலைகள் மூடப்பட்டதாலும்,வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றதால் வேலைக்கு ஆள் இல்லாமல் சிரமப்படுவதாக நூற்பாலை உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையால் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டதால்,தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்ப்பட்டுள்ளது. இதனிடையே கோவையில் பணியாற்றி வந்த வட மாநில தொழிலாளர்கள் அனைவரும் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர்.இதனால் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி இருந்தும் தொழிலாளர்கள் இல்லாமல் தொழிற்சாலை உரிமையாளர்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.குறிப்பாக வடமாநில தொழிலாளர்களை மட்டுமே நம்பி கம்பனிகளை இயக்கி வந்தவர்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் நூற்பாலையில் சுமார் 15 வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். கொரோனா ஊரடங்கால் இரண்டு மாதங்களாக மூடப்பட்ட நூற்பாலை திறக்கப்பட்டு தொழிலாளர்கள் இல்லாததால் உள்ளூர் பெண்களை வைத்து தொழிற்சாலையை இயக்கி வருவதாக நூற்பாலை உரிமையாளர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.மேலும் வருவாய் இல்லாததால் பெண் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வழியில்லாமல்,எங்களது கோரிக்கையை ஏற்பட்டு பணி செய்து வருகின்றனர்.வட மாநில தொழிலாளர்கள் இல்லாமல் சரக்குகளை ஏற்றி அனுப்புவது,லோடுகள் இறக்குதில் கடுமையான சிக்கல் நிலவி வருவதாக தெரிவித்தார்.
மேலும் உள்ளூர் பெண் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். வேலைக்கு ஆட்கள் இன்றியும்,வேலை செய்யும் பெண்களுக்கு ஊதியம் கொடுக்க வழியின்றியும் மிகவும் சிரமப்படுவதாக நூற்பாலை உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.