February 8, 2026
தண்டோரா குழு
பூண்டி வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்களிடம் பிளாஸ்டிக் கொண்டு செல்வதை தடுக்க சோதனை நடத்தி அனுமதித்து வரும் நிலையில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் வளாகத்தில் செயல்பட்டு வரும் கடைகளில், விதிகளை மீறி பிளாஸ்டிக் கவர்களில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் உள்ள தென்கயிலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலையில்,ஏழாவது மலை உச்சியில்,சுயம்பு வடிவில் வீற்றிருக்கும் ஈசனை,பக்தர்கள் தரிசிக்க ஆண்டுதோறும், பிப்.,முதல் மே மாதம் வரை, வனத்துறையினர் அனுமதியளித்து வருகின்றனர்.
இந்நிலையில்,இந்தாண்டு மலை ஏறுவதற்கு,கடந்த 1ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை மலை மீது கொண்டு செல்வதை தடுக்கும் வகையில், மலைப்பாதையின் துவக்கத்தில் உள்ள படிக்கட்டுப் பாதையில் வனத்துறையினர் சோதனை சாவடி அமைத்து, பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்த பின்பே அவர்களை மலையேற அனுமதித்து வருகின்றனர்.
எனினும்,சில பக்தர்கள், பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்களை கொண்டு சென்று, வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை வீசுகின்றனர்.இந்நிலையில், விதிகளை மீறி, கோவில் வளாகத்தில் உள்ள ஏல கடைகளில்,பிளாஸ்டிக் கவர்களில் உள்ள பொருட்கள் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது.இதனை தடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,
வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பக்தர்கள் கொண்டுவரும் பிளாஸ்டிக் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை சோதனை செய்து மலையேற அனுமதிக்கும் பணிகளுக்கு தன்னார்வலர்கள் அமைப்புகள் உதவிட முன்வர வேண்டும்
தினமும் இப்பணிகள் அங்கு செயல்படுத்தப்படுகிறது.எதேனும் ஒரு நாள் அல்லது மஹாசிவராத்திரி அன்றும் நீங்கள் உங்கள் குழுவினர் உதவியுடன் பணிகள் மேற்கொள்ள திட்டமிடலாம்.
வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பக்தர்கள் கொண்டுவரும் பிளாஸ்டிக் மற்றும் மலையில் தடை செய்யப்பட்ட பொருட்களை சோதனை செய்து மலையேற அனுமதிக்க தன்னார்வலர்கள் உதவியை நாடுகிறோம்.
தொடர்புக்கு – 63799 68047