October 21, 2020
தண்டோரா குழு
தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலையைக் கண்டித்து மாதர் சங்கத்தினர் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
வெங்காய வரத்து குறைவு காரணமாக, வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த கோரி, போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை காட்டூர் பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வெங்காய மாலை அணிந்தபடி வெங்காய விலை உயர்வைக் கண்டித்து, முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் வெங்காயத்திற்கு ஒப்பாரி வைத்தும், மாலை அணிவித்து நூதனப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து வெங்காய விலை உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டதாகவும் மாதர் சங்கத்தினர் கூறினர்.மேலும், வெங்காயத்தின் விலை கட்டுக்குள் வரும்வரை ரேசன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயத்தை விற்பனை செய்ய வேண்டும் எனவும் மாதர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.