October 14, 2020
தண்டோரா குழு
கொரொனா பெருந்தொற்று காரணமாக மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் பெற்ற கடன் தொகையை திரும்ப செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும், எனவும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உடனடியாக பணத்தை செலுத்த நெருக்கடி கொடுக்க கூடாது எனவும் இதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அனைத்து வட்டாச்சியர்களுக்கும் நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தியும் இருந்தார். இந்நிலையில், கோவையில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கடன் பெற்றவர்களிடம் அத்துமீறி நடந்து கொள்வதாக தொடர்ந்து குற்றசாட்டுகள் எழுந்த வண்னம் உள்ளது. சியோன் மைக்ரோ கிரெடிட் பவுண்டேசன் என்ற நிறுவனத்தில் இருந்து லாலி ரோடு பகுதியில் இருந்து ஒன்பது பேர் கொண்ட குழுவினர், 2019 ஆம் ஆண்டு தலா 15,000 ரூபாய் கடனாக பெற்று உள்ளனர். அதன்படி, மாதம் இரு முறை ரூபாய் 643 தவனையாக செலுத்த வேண்டும். அக்குழுவிற்கு வத்சலா என்பவர் தலைவராக உள்ளார். இந்த நிலையில், இன்று வத்சலாவின் வீட்டிற்கு அந்த மைக்ரோ பைனான்ஸ் பகுதி மேலாளர் மற்றும் ஊழியர்கள், உடனடியாக பணத்தை கட்ட சொல்லி நிர்பந்தம் செய்ததாகவும், ஓரிரு நாள் கால அவகாசம் கேட்டிருந்த நிலையில் கால அவகாசம் அளிக்காமல் மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து அவர் கூறுகையில், மாதம் இருமுறை என பணம் செலுத்த வேண்டிய கடன் தொகையை, இதுவரை ஆறு மாதங்கள் முறையாக செலுத்தி உள்ளதாகவும், கொரோனா தொற்று காரணமாக பணம் செலுத்த முடியாத சூழல் நிலவுவதால், அவ்வப்போது பணம் கட்டி வந்ததாகவும் தெரிவித்தார். மேலும், இந்த மாத தவணைக்கு கால அவகாசம் கேட்டு இருந்த நிலையில், வீடு தேடி ஊழியர்கள் வந்து பணத்தை கட்ட சொல்லி மிரட்டுவதாக தெரிவித்தார்.
இந்த விவகாரம், தொடர்பாக சியோன் மைக்ரோ பைனான்ஸ் பகுதி மேலாளர் பிரதீப் என்பவரை அலைபேசியில் தொடர்பு கொண்டபோது, வேரு குழு தலைவர் தான் வத்சலாவிடம் கொடுத்து இருந்த பணத்தை கேட்க சென்றதாக முதலில் தெரிவித்தார். பின்பு, மீண்டும் அவரே தொடர்பு கொண்டு, அதிகாரமாக மிரட்டும் தொனியில் உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை, எனவும் பேசுவது அனைத்தும் பதிவு செய்யபடுவதாகவும், தெரிவித்து அழைப்பை துண்டித்தார்.
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தபட்டு, சில தளர்வுகளுடன் தற்போது தான் மக்கள் தங்கள் பழைய வாழ்வாதாரத்தை அடைய போராடி வரும் நிலையில், இம்மாதிரியான செயல்கள் வேதனை அளிப்பதாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, வீட்டில் இருக்கும் பெண்களை பணம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் பார்க்க, வேண்டுமென்றே அவமதிக்கும் வகையில் நடத்தும் கடன் வசூல் செய்யும் நபர்கள் மீது நடைவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் தெரிவித்தனர்.