July 11, 2020
தண்டோரா குழு
கோவை நரசிபுரம் விவசாய நிலத்தில் பிடிபட்ட 15 அடி பெண் ராஜநாகத்தை பத்திரமாக மீட்ட வனத்துறையினர், சிறுவாணி அடர்வனப்பகுதியில் விடுவித்தனர்.
கோவை தொண்டாமுத்தூர் நரசிபுரம் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் இன்று ராஜநாகம் புகுந்ததாக போளுவாம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரகர் ஆரோக்கியசாமி உத்தரவில் அங்கு சென்ற வனவர் ஆசிப் மற்றும் பாம்பு பிடிக்கும் நபர்கள் விவசாய நிலத்தில் இருந்த சுமார் 15 அடி நீளமுள்ள பெண் ராஜநாகத்தை பத்திரமாக மீட்டனர்.
பின்னர்,வனத்துறை வாகனத்தில் கொண்டு சென்று சிறுவாணி அடர்வனப்பகுதியில் விடுவித்தனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:
பிடிபட்ட ராஜநாகம் ஏற்கனவே இரண்டு முறை விவசாய நிலத்தில் இருந்து பிடிக்கப்பட்டு வைதேகி நீர் வீழ்ச்சி அருகே உள்ள வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. தொடர்ந்து விவசாய நிலத்திற்குள் வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.மேலும் ராஜநாகத்திற்கு ஆபத்து ஏற்படலாம் எனவே இடத்தை மாற்றும் வகையில் ராஜநாகம் சிறுவாணி அடர்வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.