June 21, 2020
தண்டோரா குழு
வானியல் அரிய நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் இன்று தென்பட்டது. தமிழகத்தில் 30 சதவீதம் அளவிற்கு மட்டுமே தென்பட்ட போதும் இதனை ஏராளமான பொதுமக்கள் சிறப்பு கண்ணாடிகள் மூலம் கண்டு ரசித்தனர்.
வானியல் அற்புதங்களில் மக்கள் அதிகம் பார்க்கக்கூடிய நிகழ்வாக சூரிய, சந்திர கிரகணங்கள் விளங்கி வருகின்றன. சூரியன், சந்திரன், பூமி என மூன்று கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது இந்த அரிய நிகழ்வு நடைபெறுகிறது. சூரியனுக்கு பூமிக்கும் இடையே சந்திரன் வரும் போது சூரியனின் வெளிச்சம் மறைக்கப்படுவதே சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. சந்திரன் பூமிக்கு அருகில் வரும் போது இது முழு சூரிய கிரகணமாகவும், பூமியில் இருந்து தொலைவில் இருக்கும் போது கங்கண சூரிய கிரகணமாகவும் தோன்றும்.அந்த வகையில் இவ்வாண்டின் முதல் கங்கண சூரிய கிரகணம் இன்று காலை தோன்றியது. சூரியனை சுற்றி நெருப்பு வளையம் தோன்றும் இந்த வகை கிரகணம் வட மாநிலங்களில் முழுமையாகவும் தென்னிந்திய மாநிலங்களில் பகுதியாக சுமார் 30 முதல் 34 சதவீதம் வரையும் தெரியும் என வானிலை அறிஞர்கள் கணித்திருந்தனர். காலை 10.12க்கு துவங்கி மதியம் 11.43 மணியளவில் முழுமையடைந்து 1.23 மணிக்கு கங்கண சூரிய கிரகணம் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கோவையில் ஏராளமான பொதுமக்கள் சூரிய கிரகண சிறப்பு கண்ணாடிகள் மூலம் இதனை பார்த்து ரசித்தனர்.இதனை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது எனவும் சிறப்பு உபகரணங்கள் கொண்டு மட்டுமே பார்க்க வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியிருந்தனர். மேலும் கிரகண காலங்கள் தொடர்பாக உள்ள மூட நம்பிக்கைகளான உணவு விஷமாகிவிடும், கர்ப்பிணி பெண்கள் வெளியே செல்லக்கூடாது, என்பது போன்ற மூட நம்பிக்கைகள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனவும் எனவே பொதுமக்கள் உரிய பாதுகாப்புடன் இந்த அரிய நிகழ்வை கண்டு ரசிக்கலாம் எனவும் வானியல் அறிஞர்கள் தெரிவித்திருந்தனர்.