October 21, 2017
தண்டோரா குழு
சீனாவில் தனக்கு பாதுகாப்பான பயணம் கிடைக்கும் என்ற மூடநம்பிக்கையில் விமானத்தின் என்ஜின் பகுதியில் மூதாட்டி ஒருவர் சில நாணயங்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த லக்கி விமானத்தில் மூதாட்டி ஒருவர் பயணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக விமானத்தின் எஞ்சினில் நாணயங்களை வீசியுள்ளார். சீனாவின் நடந்த இரண்டாவது சம்பவம் ஆகும்.
கிழக்கு சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் உள்ள அன்கிங்கில் விமான நிலையத்திலிருந்து தென்கிழக்கு சீனாவின் யுன்னான் நகருக்கு பயணம் செய்ய லக்கி விமானம் புதன்கிழமை(அக்டோபர் 18)இரவு தயாராக இருந்தது. அப்போது அந்த விமானத்தில் ஏறிய 76 வயது மூதாட்டி ஒருவர், தனக்கு பாதுகாப்பான பயணம் கிடைக்கும் என்ற மூடநம்பிக்கையில் விமானத்தின் என்ஜின் பகுதியில் சில நாணயங்களை வீசியுள்ளார்.
லக்கி விமானத்திற்குள் ஏறும்போது, அந்த விமானத்தின் என்ஜின் பகுதியில், ஒரு மூதாட்டி நாணயங்களை வீசினார் என்று விமானநிலைய அதிகாரிகளுக்கு விமான பயணி ஒருவர் தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து தகவல் அறிந்த விமானநிலைய அதிகாரிகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அந்த விமானத்தை தரையிறக்கி அதிலிருந்த பயணிகள் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டனர். பின்னர் அந்த விமானத்தின் எஞ்சின் பகுதியை ஊழியர்கள் சோதனை செய்தபோது, என்ஜின் பகுதியில் நாணயங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதைதொடர்ந்து விமானம் வியாழக்கிழமை (அக்டோபர் 19) அதிகாலை பயணிகளை ஏற்றிக்கொண்டு லக்கி விமானம் புறப்பட்டு சென்றது.
இந்த சம்பவத்திற்கு காரணமாக அந்த 76 வயது மூதாட்டியை விமானநிலைய அதிகாரிகள் காவலில் வைத்தனர். இதைபோல் கடந்த ஜூன் மாதம், மூடநம்பிக்கை காரணமாக 80 வயது மூதாட்டி, ஷாங்காயின் புடாங் சர்வதேச விமானநிலையத்தில், சீன தென் ஏர்லைன்ஸ் விமானத்தின் எஞ்சின் நாணயங்களை வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.