June 6, 2020
தண்டோரா குழு
கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்திற்கு அருகே உள்ள வீடுகளை இடிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
முத்தண்ணன் குளத்தை சுற்றி 1500 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்கள் கடந்த 90 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இப்பகுதியில் பல்வேறு சுற்றுலா தொடர்பான பணிகள் நடைபெற இருக்கின்றன. இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக மலுமிச்சம்பட்டி, கீரணத்தம், காபி கடை உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் இடம்பெயர டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து டோக்கன் பெற்ற 992 பேர்களின் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. மேலும் வீடுகளை காலி செய்யாத ஒரு சிலர் வீடுகளை காலி செய்து வருகின்றனர். இடிந்து விழும் நிலையிலுள்ள வீடுகளும் இடிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். டோக்கன் வழங்கப்படாத வீடுகள் இடிக்கப்படாது என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து இப்பணிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.