September 19, 2020
தண்டோரா குழு
2020-ம் ஆண்டு டிசம்பர் 1 முதல் 31 வரை நடைபெறவுள்ள கோவை மாரத்தான் ஓட்டமானது விர்ச்சுவல் நிகழ்வாக (Virtual Event) நடைபெற உள்ளது.
கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளை (CCF / சிசிஎப்) இன்று 8-வது ஆண்டு கோயம்புத்தூர் மாரத்தான் நிகழ்வினை பற்றிய அறிவிப்பை வெளியிட்டது.அதில்,2020-ம் ஆண்டு டிசம்பர் 1 முதல் 31 வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வானது,இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் நடைபெறவுள்ளது. தற்போது நிலவும் கொரோனா பாதிப்பு சூழலில், இந்த ஆண்டு மாரத்தான் ஓட்டத்தினை வழக்கம் போல நடத்துவதற்கு சாத்தியமில்லை இருப்பினும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் குழு பங்கேற்பாளர்களுக்கு உற்சாகமும், பாதுக்கப்பும் அளிக்கக்கூடிய வகையில் ஒரு மாற்று ஏற்பாட்டை செய்துள்ளது.2020-ம் ஆண்டுக்கான கோவை மாரத்தான் ஓட்டமானது ஒரு விர்ச்சுவல் நிகழ்வாக (Virtual Event) நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஓட்டம் ‘ரன் ஸ்மார்ட் (run smart)’ என்பதை கருவாகக் கொண்டு நிகழவுள்ளது.
கடந்த ஆண்டுகளில் இந்த மாரத்தான் நிகழ்வு எப்போதும் அக்டோபர் மாதம் முதல் வாரத்திலேயே நடந்தது.ஆனால், ஆண்டின் அக்காலகட்டத்தில் நிலவும் மோசமான வானிலை மற்றும் பண்டிகை மற்றும் பொது விடுமுறைகளோடு ஏற்படும் சிக்கல்கள் ஆகிய காரணங்களினால்,இந்த நிகழ்ச்சி இனி இந்த ஆண்டு முதல் நிரந்தரமாக டிசம்பர் மாதத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறது.பிரசித்திபெற்ற இந்த மாரத்தான் ஓட்ட நிகழ்வு,உலகம் முழுவதிலிருந்தும் பலதரப்பட்ட 25, 000-ற்கும் மேற்பட்ட பங்கேற்பார்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோயம்புத்தூர் மாரத்தான் 2020 விர்ச்சுவல் நிகழ்வில் பங்கேற்க www.coimbatoremarathon.com என்ற இணையதளத்தில்பதிவு செய்யலாம்.
கோயம்புத்தூர் மாரத்தான் ஓட்ட இயக்குனர் ரமேஷ் பொன்னுசாமி அவர்கள் கூறுகையில்,
“மாரத்தான் இந்த விர்ச்சுவல் நிகழ்வினை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மேலும், இதனோடு தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்நிகழ்வு தொடர்ந்து நடப்பதை உறுதி செய்துள்ளோம். இம்முறை இது ஒரு விர்ச்சுவல் ஓட்டமாக இருக்கும் காரணத்தினால்,இதனை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் நடத்த வேண்டிய கட்டாயம் நமக்கு இல்லை. மாரத்தானில் பங்கேற்பவர்கள் டிசம்பர் மாதத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும், அவர்கள் விருப்பத்திற்கேற்ப அவர்கள் இருக்கும் பகுதியிலேயே ஓட / நடக்கவிருக்கும் தேதி, துவங்கும் நேரம் ஓட்டப்பாதை, தூரம் ஆகியவற்றை தேர்ந்தெடுத்து ஓட்டத்தை நிறைவு செய்யலாம். இந்த விர்ச்சுவல் ஓட்டத்தின் மற்றொரு ஆதாயம் என்னவென்றால், நமக்கு ஓட்டப்பாதை காலவரை போன்ற நிபந்தனைகள் இல்லை என்பதாகும். அதனால் நாங்கள் கூடுதலாக நான்கு ஓட்டப் பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளோம் – வழக்கமான மாரத்தான் பிரிவுகளான 5 கிமீ நடை ஓட்டம், 10 கிமீ மற்றும் அரை மாரத்தான் (21.1 கிமீ) ஆகியவற்றுடன் சேர்த்து 3 கிமீ ஓட்டம் நடை, 10 மைல் பிரிவு (16.1 கிமீ), 20 மைல் பிரிவு (32. 2 கிமீ) மற்றும் முழு மாரத்தான் பிரிவு (42.2 கிமீ ) ஆகியவை கூடுதல் பிரிவுகளாக சேர்க்கப்பட்டுள்ளன”, என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டு மாரத்தானில் பங்கேற்க விரும்பும் இந்தியாவில் உள்ளவர்கள் ரூபாய் 99, மற்றும் இந்தியாவிற்கு வெளியில் உள்ள பங்கேற்பாளர்கள் 5 அமெரிக்க டாலர்களையும் நன்கொடையாக கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளைக்கு வழங்க வேண்டும். இது அனைத்து பிரிவு பங்கேற்பாளர்களுக்கும் பொருந்தும். இந்தியாவில் உள்ள பங்கேற்பாளர்கள் விரும்பும் பட்சத்தில் போட்டியை பூர்த்தி செய்ததற்கான ஒரு பதக்கத்தினை ரூபாய் 399/ செலுத்தி பெறலாம் (இந்தியாவில் இல்லாதவர்களுக்கு $24 அமெரிக்க டாலர்கள்) அல்லது போட்டியை பூர்த்தி செய்ததற்கான ஒரு பதக்கம் மற்றும் ஒரு டி ஷர்ட்டை ரூபாய் 699/ நன்கொடை செலுத்தி பெறலாம் (இது இந்தியாவில் உள்ள பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்), சரிபார்த்தல் பொருட்டு, பங்கேற்பாளர் தங்கள் ஓட்ட நேரத்தினை இணைய வழியாக கட்டாயம் சமர்பிக்க வேண்டும். விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், ஓட்டத்தினை பூர்த்தி செய்ததற்கான பதக்கம் மற்றும் டி ஷர்ட் ஆகியவை,அதற்காக விண்ணப்பித்த பங்கேற்பாளரின் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் மாரத்தானில் பங்கேற்று, ஒரு உயரிய நோக்கத்திற்கு பங்களித்தமைக்காகவும் டிஜிட்டல் சான்றிதழ் மற்றும் டிஜிட்டல் பதக்கம் வழங்கப்படும்”
கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் T. பாலாஜி கூறியதாவது,
இந்த ஆண்டு, கோயம்புத்தூர் மாரத்தான் உலகம் முழுவதிலிருந்தும் பங்கேற்பாளர்களை ஈர்க்கும் முனைப்போடும். நமது அறக்கட்டளைக்கு தொடர்ந்து உதவியினை பெறும் நோக்கோடு நடைபெற்றது. கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற மாரத்தான் நிகழ்வுகளுக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. அதனால் புற்றுநோய்க்கு எதிரான நமது போராட்டம் பெரிய அளவில் பலரை சென்றடைந்தது; பலரின் வாழ்வில் மலர்ச்சியினையும் ஏற்படுத்தியது, முகாம்கள் மற்றும் இதர விழிப்புணர்வு செயல்பாடுகளில் பெறப்படும் நிதியுதவிகளைத் தாண்டி, இந்த மாரத்தான் நிகழ்வானது கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாரத்தான் ஓடும் நபர்களின் ஒரு சமூக அமைப்பை உருவாக்கியுள்ளது என்றார்.
கூடுதல் விவரங்களைப் பெற. infos coimbatore marathon. com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்.
மேலும் தகவலுக்கு 9894334963