August 5, 2020
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி சார்பில், கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளுக்காக சவுரிபாளையம் பகுதியில் கபசுரகுடிநீர், வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை மாவட்ட, நிர்வாகம் சார்பில், கொரோனோ தடுப்பு பணிகளுக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனே தொடர்ந்து சவுரிபாளையம் பகுதியில் கபசுரகுடிநீர், மற்றும் ஹோமியோபதி ஜிங்க் மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சியினை அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் வாயிலாக இந்த பகுதி மக்களிடம் பேசிய அமைச்சர் எஸ் பி வேலுமணி,
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்த பகுதி மக்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற மாத்திரைகள் 40, வைட்டமின் மாத்திரைகள் 40 மற்றும் கபசுரகுடிநீர் பொடி 50 கிராம் அடங்கிய தொகுப்பு, இந்த பகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கபடுவதாக தெரிவித்தார். மேலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் காரணமாக, தமிழகத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன எனினும், இறப்பு விகிதம் தற்போது குறைந்து வருகின்றது, எனவும் இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக மேற்கொண்டு வருகின்றார் எனவும், அனைத்து பொதுமக்களும் அதிக அளவில் முககவசங்கள் அனந்து வெளியில் வருவதாகவும், அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார். மேலும் முக கவசங்கள் அணியாத நபர்களிடம் யாரும் பேச வேண்டாம் என தெரிவித்தார்.
மேலும் கோவை மாவட்டத்தில் 11 பகுதிகளில் இன்று முதல் இந்த கொரோனா தடுப்பு அடங்கிய தொகுப்பு வழங்க உள்ளதாக தெரிவித்தார். சிங்காநல்லூர் பகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வழங்க உள்ளதாக அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.