August 29, 2020
தண்டோரா குழு
கொரோனா ஒழித்த உத்தமரே என போஸ்டர் அடித்து அமைச்சர் கொரோனா தொற்றை கட்டுபடுத்த தவறிவிட்டார் எம்.எல்.ஏ நா.கார்த்திக் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் வடகோவை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது எனவும், இதுவரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கோவையில் தினமும் 10 முதல் 12 பேர் உயிரிழக்கின்றனர். கோவை மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு தான் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க காரணம். கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் அதிமுக அரசு தோல்வியடைந்துள்ளது. கொரோனா பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை அரசு மூடி மறைக்கிறது.கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான தகவல்களை வெளிப்படைத் தன்மையுடன் வெளியிட வேண்டும். கொரோனா பரிசோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும்.
கோவையில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லை.இஎஸ்ஐ மருத்துவமனையில் போதுமான மருத்துவ உபகரணங்கள் இல்லை என அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் உணவு,மருந்துகள் தருவதில்லை எனவும் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடுகளை செய்யவில்லை. கோவையில் 15 நாட்களுக்கு ஒரு முறை சோதனை தொழில் நிறுவனத்தினர் மற்றும் வணிகர்கள் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும் என உள்ளாட்சி துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் பொருளாதார பாதிப்பால் சிக்கி தவிக்கும் நிலையில் அந்நிறுவனங்கள் பரிசோதனை செய்ய முடியாது எனவும் அவர் கூறினார். ஊரடங்கு முறையாக திட்டமிட்டு செயல்படுத்தவில்லை எனவும் கொரோனா பரிசோதனை முடிவுகள் தாமதமாக வழங்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார். பிளிச்சிங் பவுடர், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளன எனவும், மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.கொரோனா ஒழித்த உத்தமரே என போஸ்டர் அடித்து அமைச்சர் கொரோனா தொற்றை கட்டுபடுத்த தவறிவிட்டார் எனவும் தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சி இறுதியில் மறைந்த காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் வசந்தக்குமார் அவர்களுடைய உறுவப்படத்திற்க்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் உட்பட அனைவரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.