December 24, 2018
-ச.ச.சிவசங்கர்
ஓவியம் என்பது ஒருவித மொழி, அடிப்படையில் மனிதனுக்கும் ஓவியத்திற்கும் ஒரு நீண்ட நெடியபந்தம் உண்டு. பேச்சுக்கலையை கற்பதற்கு முன்பே குருவியை கோழியாகவும், நாய்குட்டியை பூனைக்குட்டியாகவும் வீட்டுச்சுவர்களிலும் மண்தரைகளிலும் வரையத் தொடங்கிவிடுவான். தான் செய்வது என்னவென்றே தெரியாத மழலைப்பருவம் தொட்டு ஓவியத்துடன் ஓவ்வொரு மனிதனும் பயணம் செய்வான். ஆனால், குழந்தை பருவம் கடந்து பால்யம் வருகையில் கலைநேர்த்தி ஒரு சிலருக்கே சாத்தியமாகும். இயல்பிலேயே வரையும் திறன் உடையர்கள் கனிசமானோர் இருக்கும் இடத்தில் இங்கும் ஒருவர் தனது குழந்தை பருவத்திலிருந்தே ஒவியத்தில் தன்னை நிலைநாட்டி வருகிறார். பிரவீன்தீபக் (23).
திருநெல்வேலியை சேர்ந்த பிரவீன் தீபக் தற்போது கோவையில் வசித்து வருகிறார், கட்டிட வடிவமைப்பாளரான இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே ஓவியம் வரைய தொடங்கிவிட்டார். இவரது பள்ளி காலத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்ட அளவில் நடந்த ஓவியப் போட்டியில் வெற்றி ஒரு திருப்புமுனை, அதிலிருந்து ஓவியத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக ஓவியம் வரைவதை தனது கடமையாகவும் செய்து வருகிறார்.
இவரது ஓவியங்கள் கோவை அரசு அருங்காட்சியகத்தில் 22 முதல் 29ம் தேதி வரை கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
மாயாஜாலபென்சில்:
பிரவீன் தனது ஓவியத்தில் யதார்த்தத்தை கொண்டுவர செய்யும் அவரது முயற்சி அபாரமானது. ஓவியத்தில் கவர்ச்சியை எதிர்பாராமல் முகத்தில் இருக்கும் பரு, சுருக்கம் என யதார்த்தத்தின் அழகியல் மாறாமல் வரையும் விதம் தனித்துவம். தனது பென்சிலை கொண்டு தீட்டும் ஓவியங்கள் மாயாஜாலம் போல் ஒட்டுமொத்த யதார்த்ததை பிரதிபலிக்கிறது.
தன் ஓவியத்திறன் குறித்து பிரவீன்தீபக் கூறுகையில்,
’எனக்கு சிறுவயதிலிருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகம். என்னை என் வீட்டில் ஓவியப் பயிற்சிக்கு போகச்சொன்னார்கள். ஆனால் நான் அதற்கெல்லாம் போகவில்லை, நானகவே வரைய கற்றுக்கொண்டேன். என் குடும்பத்தினர் நல்ல ஆதரவாக இருந்தனர். நான் கட்டிடவடிவமைப்பாளராக இருப்பதால் கட்டிடங்களை வரைவதில் கவனம்செலுத்துவேன். இதுவரை உலக பிரபலமான கட்டிடங்களை பேனா மூலம் வரைந்தேன். மேலும் வருங்காலத்தில் தஞ்சை பெரியகோயில் போன்ற நம்ம ஊர்கட்டிடங்களை” பென்ஆர்ட்” ஆகவ ரையவேண்டும்’ என்று கூறினார்.